mandag den 26. maj 2008

சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' ....

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள்.

அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை.

இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

நன்றி: குமுதம் & தேசிகன்.

mandag den 5. maj 2008

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - சுவாமி சுகபோதானந்தா

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.
ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.
கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு... என்று வரிசையாகச் சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.
ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக, எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.