onsdag den 12. marts 2008

இந்த நாள் இனிய நாள்! - சுகி சிவம்

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டி யில் கை வைத்து எண்ணி, எண்ணி (தப்புத்தப்பாக) மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று உண்டு.

அப்பா தரப்போகும் பட்டாசுக்காசு, அம்மா செய்யப் போகும் பலகாரம், அப்பா ஆசியின் (வசவு) பேரில் அம்மா எடுத்துத் தரப்போகும் டிராயர் சட்டை இவையெல்லாம் கலர்க்கலர் கனவுகளாய் தூக்கத்தைக் கெடுக்க, மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.சின்னச் சின்ன சந்தோஷங்களாய் சிறகடித்த அந்த மகிழ்ச்சி மலர்கள் இப்போது என்ன ஆயின? எங்கே போயின? இப்போது டப்பா, டப்பாவாகப் பலகாரங் களும் பை, பையாகப் புதுத்துணிகளும் பீரோ, பீரோ வாக நிரம்பி வழிந்தாலும் மனசு மட்டும் நிறைய வில்லையே... ஏன்? வளர்ந்து விட்டோமா? எதையோ இழந்து விட்டோமா? இது மாறுதலா? தேய்மானமா அல்லது ஞானோதயமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

எதை அடைய வேண்டும் என்று ஏங்கினோமோ, எது எட்டவில்லை என்று வருந்தினோமோ... அது எட்டும் போது சந்தோஷம் மட்டும் கிட்டுவ தில்லையே... ஏன்? ஒரே காரணம்... மனசு... மனசு... மனசுதான்... அப்போ திருந்த மனோநிலை அப்படி! இப் போதிருக்கும் மனோநிலை இப்படி! கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்...

சட்டென்று விளங்கும்படி ஒரு கதை சொல்கிறேன்.அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள் இல்லாதவ ராகக் காரியங்கள் செய்வார். அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்? இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை. மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்... அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?' என்ற எண்ணம் அவரைக் குடைந்தது. ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே கிடையாதா? ஏன் இவ் வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று கேட்டார் அரசர்.

"மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை... வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி... இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார். "வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார் மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார் அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன். "ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறி னான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது.

அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்... ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது! அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்... "அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது. இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.

சில கிராமங்களின் வழியாகக் காரில் போகும் போது அங்குள்ள நாய்கள் பாய்ந்து, பாய்ந்து நமது கார்களைத் துரத்தும். இந்தப் பாய்ச்சலால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை; நாய்தான் களைப்படைந்து எச்சில் வழிய நாக்கைத் தொங்கப் போட்டபடி பெருமூச்சு விடப் போகிறது.

இதே போலத்தான் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை நாமும் துரத்திக் கொண்டே இருக்கிறோம். வேக, வேகமாகத் துரத்துகிறோம். பிறகு வருத்தப்பட்டு அமர்ந்து விடுகிறோம். இந்த மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமோ?

நாற்பது வயது வரை பணம், பணம் என்று உடல் நலத்தை மறந்து உடல் நலத்தை இழந்து துரத்துகிறோம். நாற்பதாகும் போது துரத்திச் சேர்த்த பணத்தை மருத்துவமனைகளில் கொட்டி ஆஹா உடல் நலம், உடல் நலம் என்று துரத்துகிறோம். அதனால் தான் ஒரு காலத்தில் இனித்த வாழ்க்கை மறுகாலத்தில் கசக்கிறது.

சின்ன வயதில் எது கிடைத்தாலும் பெரிய விஷயமாகத் தெரிந்தது. ஒரு கோலிக் குண்டு கூட உலக உருண்டைபோல நமக்குப் பெரிய விஷயமாக இருந்தது. இப்போதோ உலக உருண்டையே கொடுத் தாலும், நமது பேராசைக்கு முன் அது வெறும் லாலிபாப் போல சிறுத்து விடுகிறது. மாற வேண்டிய மனோபாவம் இது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், மறுபடியும் ஒரு குழந்தையைப் போன்ற மனம் நமக்கு வேண்டும். அப்போது தான் அன்றைக்குத் தீபாவளி தித்தித்த மாதிரி இன்றைக்கும் தித்திக்கும்.

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி... "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்!' என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.

"ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்...' சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது... அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை...

"ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது... ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?' என்று பயந்தது. பிறகு, "சீச்சி... நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்.."' என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்... சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர். இரண்டும் வேண்டாமே! கிடைத்த 99ஐ புறக்கணித்து விட்டு அதை நூறாக்கப் போராடும் இயல்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் இல்லாத ஒன்றிற்காக ஏங்குவதை விட்டு மாற வேண்டும். காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம், ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடு வோம்.

இந்தக் கருத்தை விளங்கிக் கொண்டால் இன்று மட்டுமல்ல, என்றுமே தீபாவளிதான். இதை உணர்ந்து விட்டால் இந்த நாள் ஓர் இனிய நாள்.

நன்றி: தினமலர்

søndag den 24. februar 2008

அரட்டை மடங்களும், சில அதிர்ச்சி தகவல்களும் -ஜெஸிலா!

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன். அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான்.

தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது. துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை.

பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது. எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது

1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு?

இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'. தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது. ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன்.

இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை. அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்?

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

நன்றி : ஜெஸிலா (பதிவிலிருந்து)

torsdag den 7. februar 2008

மனிதர், வாழ்வுமுறை,, அழிவின் விளிம்பில் பூமியின் சுற்றாடல்

பூமிப்பந்தின் மேலோட்டினை மற்றைய உயிரினங்களுடனான போட்டியில் மனிதன் என்னும் இனம் ஆளுகைக்குட்படுத்தி விட்டது. மனித இனங்கள் தங்களிடையே ஏற்படுத்திய போட்டியில் பல வகையான அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை உருவாக்கின. இவற்றில் வெற்றிபெற்றிருப்பது இப்போதைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் பொருளாதாரமாகவே தோற்றம் பெறுகின்றது.

இன்று உலகம் எதிர் கொள்ளும் அதி மிக முக்கிய பிரச்சனையான இந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் என்பது அபாயகரமான எல்லை புள்ளியில் நின்று எதிர்கால சந்ததியை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.

இதனது அபாயம் ஆண், பெண், வயோதிபர், குழந்தைகள், மேல்சாதி, கீழ்சாதி, கறுப்பு, வெள்ளை, தொழிலாளிகள், முதலாளிகள் என்று எல்லாத் தரப்பினரையும் பாதிக்கின்றது. இந்த ஆபத்திலிருந்து எவரும் தப்ப முடியாது.

இது தெளிவாகத் தெரிந்திருந்தும் இன்று ஆதிக்கத்திலிருக்கும் நவீன முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இதனை கட்டுப்படுத்த முடியுமா?
இந்த சூழல் மாசடைதல் என்ற பாரிய அபாயத்தினை தற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பலகட்சி ஆட்சிமுறையின் கீழ் நான்கு வருடத்திற்கோ அல்லது ஜந்து வருடங்களிற்கோ ஒருமுறை ஆட்சி பீடமேறும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பினால் சூழல் மாசடைதல் பிரச்சனைக்கு சரியான அல்லது நிரந்தரமான தீர்வு தேடமுடியுமா என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நிலம், நீர், காற்று என்ற பூமியின் மூன்று முக்கிய அடிப்படைகளை மீண்டும் புனரமைப்பு செய்யமுடியுமா? என்ற அளவிற்கு இந்த மாசடைதல் பாதிக்கப் பண்ணிவிட்டது.

இதன் இரண்டு பிரதான காரணிகளாக பெருந்தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் தான் இந்த சூழல் மாசடைதலின் 75 வீதத்திற்கு மேல் காரணமாகின்றது. பெரும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைமண்டலம், இரசாயன திரவக் கழிவுகள், பக்கவிளைபொருட்கள், போன்றனவும், நீண்டநேரம் பயணிக்கும் அவசியமற்ற ஆடம்பர வாகனங்கள், பாரிய கனரக வாகனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் புகைமண்டலத்தை மட்டுமல்லாமல் அவை நிலத்திற்கடியில் இருக்கும் மசகுப் பொருளை குறைத்துக்கொண்டே செல்கின்றன.

இப்படியான இன்னோரன்ன ஆபத்துக்களின் தர்மகர்த்தாக்கள் யாரென்று பார்ப்போமாகில் எமது வாழ்வியலின் ஆனந்தப் பரவசத்தை எட்டப்பண்ணுகின்ற "நுகர்வுப் பொருளியல்"
(Materialism)) மனோபாவமும். இதனை திட்டமிட்டு மக்களிடையே உருவாக்கிய முதலாளித்துவக் கலாச்சாரமும்தான்.

சிறிய உதாரணம், எமது உடலின் ஆரோக்கியத்தினை வலுப்படுத்த வேண்டுமானால் ஒரே ஒரு சரியான வழியும் அதேநேரம் கடினமான வழியுமான ஒன்று உடற்பயிற்சி மட்டும்தான். இதற்கு மாற்று வழியோ இல்லை குறுக்கு வழியோ கிடையாது.

இதே போன்று அன்மையில் BBC யில் வெளிவந்த விஞ்ஞானிகளின் குழுவொன்றின் அறிக்கையின் படி எங்கள் "வாழ்க்கை முறையை" மாற்றாவிட்டால் சூழல் மாசடைதலை நிறுத்தவே முடியாது. நாம் எமது எதிர்கால சந்ததிக்கு பழுதடைந்த பூமியைத்தான் விட்டுச்செல்கின்றோம். இதனை தீர்ப்பதற்கு எந்த குறுக்கு வழியோ சுகமான முறைகளோ கிடையாது. இந்த "வாழ்க்கை முறை" என்பதன் அர்த்தம் மக்களிடையே நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய ஆடம்பர வாழ்க்கை முறைதான்.

சூழல் மாசடைதல் பற்றிய கருத்தியல் தாற்பரியம் சாதாரண மக்களிடையே தேவையான அளவு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ரொறன்ரோவில் பச்சை, நீல நிறங்களிலான "கழிவுப் பொருட்களிற்கான" பிளாஸ்ரிக் கென்டைனர்களின் உபயோகத்தின் ஆரம்பம்.

பெரும்பாலோரின் அபிப்பிராயம், ரொறொன்ரோவின் அவசர வாழ்க்கையோட்டத்தில் சனங்கள் இதுகளை சரிவர கவனிக்கப் போவதில்லை. இந்தத்திட்டம் வெற்றியடையாது என்றே எண்ணினார்கள். ஆனால் எவருமே எதிர்பாராத அளவிற்கு இது 150 வீதம் வெற்றியடைந்தது. எனவே சராசரி மக்கள் எப்பொழுதும் மாசடைதல் பற்றி விழிப்பாகவே இருக்கின்றனர் என்பது உண்மை. பாலர் பாடசாலைகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரையில் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. அதே நேரம் பாரிய தொழிற்சாலைகளாலும், கனரக வாகனங்களினாலும் சூழல் மாசடைகின்றது என்றும் கற்பிப்பார்கள. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படை நியதியாக இந்த பொருளாதார, வர்க்க அமைப்புமுறை என்பதை மட்டும் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

ஆனால் கனடாவிலோ அல்லது ரொறன்டோவிலோ ஆட்சி மாறும் அரசியல்வாதிகளால் "பெருந்தொழிற்சாலைகளின் கழிவு சுத்திகரித்தல்" பற்றிய திட்டத்தில் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களை கூட கொண்டுவர முடியவில்லை. காரணம் பெருந் தொழிற்சாலைகளின் தலைவர்களை பகைத்து இலகுவாக வெற்றிகொள்ள முடியாது.

இன்னுமோர் உதாரணம், இந்தியாவில் ஒரு பாரிய நெசவாலையின் கழிவுகள் தமக்கு அண்மையிலுள்ள நன்னீர் விவசாய பிரதேசங்களை நிரந்தரமாக மாசடையப்பண்ணிவிட்டது. இந்திய காங்கிரஸ் அரசு நீதிமன்றங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு நெசவாலையின் முதலாளிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் இறுதியாக இந்த உத்தரவினை வாபஸ் வாங்கிவிட்டது. காரணம் "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்" என்று நெசவாலை நிர்வாகம் இந்திய அரசையே மிரட்டியதுதான் காரணம்.

நிதர்சனமான ஒன்று "தொழிலதிபர்களின் கைகளில்தான் அரசநிர்வாகம்"
இங்குள்ள இன்னுமொரு உண்மைப் பக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் "கவர்ச்சிகரமான நுகர்வுப் பொருளாதார" முறையை மாற்றாவிட்டால் வேறு வழியில்லை என்பதே இதன் அர்த்தம். இந்த நுகர்வுப் பொருளாதார முறை என்பது தங்கியிருப்பதே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில்தான். காரணம் மேற்கத்திய நுகர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையே போட்டி வியாபாரம்தான். இந்தப் போட்டி வியாபாரத்தில் ஒரு வியாபாரி சிறிது தயங்கினாலும் அடுத்த ஆறுமாதகாலத்திற்குள் அவர் இல்லாமல் போய்விடுவார்.

ஒரு தயாரிப்பு புதிதாக உருவாகலாம், என்பது வேறு விடயம். ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் ஒரு பாவனைப் பொருளுக்கு புதிய வர்ணம், புதிய Labels புதிய அளவு (30 வீதம்) போனஸ், கவர்ச்சிகரமான புதிய வடிவம் என்று ஒரு போலியான புதிய வடிவத்தை ஏற்படுத்தி செயற்கையான போட்டியை உருவாக்குகின்றது இன்றைய நவீன முதலாளித்துவம். இதற்காக பாரிய தொகை பணத்தை வாரியிறைப்பதுடன் இந்த செயற்கையான முதலாளித்துவப் போட்டிக்காக பெருமளவிலான மூலப்பொருட்களை பூமியின் மேலோட்டிலிருந்து பெற்று அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்த செயற்கைப் போட்டிக்காக பெருந்தொழிற்சாலைகள் சூழலை மாசடையச் செய்வதில் 70 வீதத்திற்கும் அதிகமான மாசடைதலை செய்கின்றன.
இத்தகைய போட்டி வியாபாரம் இல்லாவிட்டால் யாரும் முதலாளிகளாக வளரமுடியாது.

ஒரு நாட்டின் ஏன் இந்த உலகத்தின் அரசும், அரசியலும் தங்கியிருப்பது இந்த முதலாளிகளின் பொருளாதாரத்தில்தான்.

ஆகவே இந்த முதலாளிகளின் செயற்கை போட்டிக்காக, அதாவது நடைபெறும் மூலதனப் பெருக்கத்திற்காக நடைபெறும் அனாவசியமான (Raw Materials ) மூலப்பொருட்களை அழிக்கும் விடயத்தை இன்றைய முதலாளித்துவ அரசியல் கட்டுமானத்தால் தடுக்கமுடியாது.
இதற்கு நல்ல உதாரணம், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் Skin Lotion தயாரிக்கப்படுகிறது. மூன்றே மூன்று அடிப்படை தயாரிப்புக்கள்தான் உள்ளன. எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை 48 வித்தியாசமன Tubes களில் அடைக்கப்படுகின்றன. இந்த Skin Lotion களின் தயாரிப்புக்கான செலவுகளைப் போன்று 4 மடங்கு செலவு இந்த 48 வித்தியாசமான Tubes களிற்கு வேவைப்படுகிறது.

அளவுகள் வேறு, வடிவங்கள் வேறு, வண்ணங்கள் வேறு, போனஸ் வேறு.
இந்த Skin Lotion மனிதர்களுக்கு தேவைதான். ஆனால் 48 விதமான Tubes களுக்கு செலவாகும் மூலப்பொருட்கள்தான் இந்த ஜனரஞ்சக பொருளாதார கலாச்சாரத்திற்கு தேவைப்படுகின்றது. அதுவும் 6 மாதங்களிற்கு ஒரு முறை இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இன்றைய நவீன முதலாளிகளுக்கு இவற்றை செய்யாவிட்டால் வேறு வழியில்லை. இவற்றை தவற விட்டால் இன்னுமொரு முதலாளித்துவ முதலை இவர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

இவற்றை விடவும் முக்கியமான விடயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கின்ற "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை."
வேலைக்காக, ஒரு அரசாங்க கிராமிய நகர அலுவலக நிர்வாம் தொடர்பாக மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தூர கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. காரணம் பெருந் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் ரொறொன்ரோ போன்ற நகரங்களிலிருப்பதால் தூர இடங்களிலிருந்தும் நகரத்தை நோக்கியே மக்கள் வரவேண்டி உள்ளது.

இதற்கு மாற்றாக, சூழல் மாசடைதலை தடுக்கக்கூடிய முறையானது, "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை".
கல்வி, அரச, நகர, நிர்வாக அலுவலகங்கள், போன்றனவற்றை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் உள்ளுர் அரசினாலும் தேசிய அளவிலான அரசியல்வாதிகளாலும் உருவாக்கமுடியும்.
ஆனால் வேலைவாய்ப்பு என்பது தங்கியுள்ள பெரும்தொழிற்சாலைகளை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் கொண்டுவரமுடியாது. காரணம் பெரும் தொழிற்சாலைகள் இந்த "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை" க்குள் மட்டும்தான் பெரும் லாபத்தினையும் மூலதனத் திரட்சியினையும் பெறமுடியும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பெரும்பாலான நகரங்களை முற்றாக இழந்த ஜேர்மனியில் பரவலாக்கப்பட்ட நகர அமைப்புமுறை சில மாநிலங்களில் காணமுடியும். காரணம் மற்றைய நாடுகளுடன் பார்த்தால் ஒப்பீட்டளவில் பிற்பட்ட காலங்களில் நகரங்களை அமைத்ததினால் அவ்வாறு ஏற்பட்டன. அங்கே நாங்கள் அரச நிர்வாக, கல்வி, போன்ற விடயங்களிற்காக நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லாத போதிலும் பெரும்தொழிற்துறைசார் விடயங்களில் "குவியப்படுதத்தப்பட்ட நகர" முறைதான் கைக்கொள்ளப்படுகின்றது.
சிலரது வாதம், நவீன தொழில் நுட்பம் இவற்றுக்கெல்லாம் தீர்வு வைத்துவிடும் என்று. ஒரு போதும் இல்லை,
இதற்கு நல்ல உதாரணம் இந்தியா, பிறேசில் போன்று வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம, இயந்திரவியல் தொழில்நுட்பம் போன்றவை பாரிய வளர்ச்சியை எட்டி, நாட்டின் பொருளாதாரத்தினை பெருகச்செய்த போதிலும் எதிர் வினையாக பட்டினியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறதே? ஏன்?

ஏனெனில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குத்தான் இந்த "நவீன தொழில் நுட்பம்" சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை சாத்தியமாக்குவது எப்படி என்று பார்த்தால் "நுகர்வுப் பொருளாதாரம், முதலாளித்துவ கட்டமைப்பு" என்பவற்றை இல்லாதொழிப்பதுதான்.
இவை பிரம்மாண்டமான ஒரு சாத்தியமல்லாத விடயத்தை கதைப்பதாக தோன்றினாலும் வேறு எந்தவிதமான குறுக்கு வழிகளோ அல்லது மந்திர தந்திரமோ எதும் கிடையாது.

சபேசன் - கனடா

onsdag den 9. januar 2008

இளைய அப்துல்லாஹ்: சில வரிகள் எஸ்.கௌந்தி

இலங்கைத் தமிழர்களில் சிலர் எமது போர்க்கேள்வியை ஓர் கொடிய கேள்வியாகப் பார்த்துள்ளனர். அவர்களுள் எங்கள் கவனத்திற்குத் தப்பிப்போகாத ஒருவராக இளைய அப்துல்லாஹ் உள்ளார்.

அண்மையிலே இவரது 'பிணம் செய்யும் தேசம்" கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இவர் பற்றி இந்தப் புத்தகத்தின் பின்பக்கத்தில் சில குறிப்புகள் உள்ளன. 'லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம் அனஸ் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் பரிச்சயம் கொண்டவர்.

இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சோத்திருக்கின்றார். 'எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலி;பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக்கொடுத்திருக்கிறது. புலம்பெயர் சஞ்சிகைகளில் தனித்துவம்மிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன." கவிஞர் தனது தொகுப்பிற்குக் கொடுத்திருக்கும் தலைப்பு எங்கள் தேசத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே காட்டுகின்ற ஒன்றா?

கவிஞர் தலைப்புள் 'தேசம்" எனும் பதம் பாவிக்கப்பட்ட விதம் ஓர் தேசத்தைச் சுடுகாடாகக் காட்டுகின்றது. ஆம்! கவிஞர் மொழி பொய்மொழியல்ல. எங்கள் தேசத்தில் புலிகள் தொடக்கிய பயங்கரவாதத்தின்பின் பின்னர் ஏற்பட்ட அனுபவங்களின் தடங்களை இவரது கவிதைகளில் பல உள்ளடக்கியுள்ளன.

தெளிவும், பிரிவாற்றாமையின் தடங்களையும் கொண்ட இவரது கவிதைகள் ஏன் இலங்கை சீரழிந்து கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கான இலக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதக்கூடியது.

நன்றி தாயகம்

lørdag den 5. januar 2008

"ரீமிக்ஸ்' வன்முறை!

அண்மைக்காலமாக பழைய தமிழ்த் திரைப்பாடல்கள் வேறுவிதமான இசை வடிவங்களில் மிகப் பரவலான முறையில் தமிழ் மக்களின் காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கின்றன.

பழைய பாடல்களின் இனிமையைக் குலைத்து நிதானத்தை வேகப்படுத்தி இடையிடையே நகைப்புக்குரிய முறையில் ராக் இசையைத் திணிக்கும் வன்முறைக்கு நமது தமிழ்த் திரையுலகினர் "ரீமிக்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மேல்நாட்டு ராக் இசைப்பாடலின் நடுவிலே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி என்று நிதானமான தமிழில் இரண்டு வரிகளை யாராவது சேர்த்து ரீமிக்ஸ் முயற்சி சேர்க்கிறார்களா!

தனது வரலாற்றைத் தானே சிதைத்துக் கொள்கிற தமிழ்த் திரையுலகின் அதிகப்பிரசங்கித்தனத்தைக் கண்டித்து திரையுலகின் தரப்பில் இருந்தே முதல் கண்டனக்குரல் எழுந்திருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் எதுவும் நிகழவில்லை; அது ஏன் என்றும் தெரியவில்லை.

மனிதகுல வரலாற்றில் நாம் பார்க்கிற, படிக்கிற, கேட்கிற யாவுமே ஆவணங்களாகும். அவ்வகையில் நமது பழைய தமிழ்த் திரைப் பாடல்களும் நமக்கான ஆவணங்களாகவே திகழ்கின்றன. எனவே, அவற்றைக் குழப்பி அதில் மீன் பிடித்துப் பிழைக்கிற அவல நிலைக்கு இன்றைய நமது இளைய தலைமுறை இசைப் படைப்பாளிகள் போய்விடக்கூடாது. சந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டித்தேரு என்கிற ஒரு வரியில் தேனி வீரபாண்டிக் கோயிலின் தேர்த் திருவிழா குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றின் போக்கில் நாளை தேர் மாறினாலும், இந்தத் திரையிசை ஆவணம் மாறாது. இந்தப் பாடலை, மார்க்கட்ல நின்னாலும் நீ விரபாண்டி காரு' என்று ரீமிக்ஸ் செய்து பாடினால், அது நமது ஆவணத்துக்கெதிரான துரோகமேயன்றி வேறென்ன?

""பழைய பாடல்களின் வரிகளுக்கு வேறுவிதமான மியூசிக்கை கம்போசிங் செய்வது ஒன்றும் குற்றமல்ல. இப்படிப்பட்ட "மாடிஃபிகேஷனை' தற்போது மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலைப் போட வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. அது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் விருப்பமாக இருக்கிறது. மற்றபடி இந்தப் போக்கு தவறானது எனும் கருத்திலும் உண்மையில்லாமலில்லை'' என்று ரீமிக்ஸ் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.
""தமது காலத்தில் திரைப்பாடல்களுக்கு இசையமைத்து அதைப் படைப்பாக்கி, மக்களின் மாபெரும் வரவேற்புடன் அவற்றை நிலைநிறுத்தியிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களுக்குச் செய்யும் துரோகமல்லவா இது? எனும் பேராசிரியர் நிர்மலா இராஜேந்திரனின் கேள்விக்கான விடையை இன்னும் எவரும் சொல்லவில்லை.

உலகின் மூத்த இசை தமிழ் இசைதான். இதை நுõற்றுக்கணக்கான இசை ஆய்வாளர்கள் உறுதி செய்திருப்பதோடு, திரும்பிய திசையெல்லாம் தமிழ் இசை ஒலிக்க வேண்டும் என்றும் விரும்பி, அதற்கு ஆதரவாக இயக்கத்தையே தொடங்கி நடத்தினார்கள். நமது தொன்மையான அந்த இசையை அடிப்படையாக வைத்தே தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு அக்கால இசையமைப்பாளர்கள் இசையமைக்கத் தொடங்கினார்கள். அத்தகைய மரபுப் பெருமைமிக்க நமது திரையிசைப் பாடல்களை, மாடிஃபிகேஷன் செய்வது கடைந்தெடுத்த அதிகப்பிரசங்கித் தனமல்லவா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நீர்த்தேக்கமான கல்லனை தொடர்ந்து பயன்படவேண்டும் என்பதற்காக அதன் உறுதிக்கு மேலும் உறுதி சேர்க்கும் விதமாக கட்டுமானத்தை பலப்படுத்துவது சீரிய பராமரிப்பு பழைய பாடல்களுக்கு அத்தகைய பராமரிப்பு அவசியமில்லை. அவை ஒவ்வொன்றும் தேயாத நிலவு.

19ஆம் நுõற்றாண்டில் ஸ்காட் என்ற ஐரோப்பிய பாதிரியார் தமிழின் யாப்பிலக்கணத்தில் வல்லவராகி, திருக்குறளை தம் விருப்பத்தக்குத் திருத்தி எழுதி, பால், இயல், அதிகாரங்களையம் மாற்றி (அதாவது மாடிஃபிகேஷன் செய்து கொண்டு) மதுரைக்குச் சென்று நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த பாண்டித்துரை தேவர் அவரிடமிருந்து அந்த (திருத்தப்பட்ட) திருக்குறள்படிகள் மொத்தத்தையும் விலைகொடுத்து வாங்கி, தீ வைத்துக் கொளுத்தி, திருக்குறளைக் காப்பாற்றினார். அதுபோல ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஒரு முடிவு கட்டினால் இப்பிரச்னைக்குத் தீர்வு கிட்டும்.

நன்றி கல்கி

fredag den 4. januar 2008

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( விஜுற்ஐதீழி ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா?

அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( யிஷ்ஐஆ ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரைநெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(ழிஸ்ரீழிஐ ஸழிதீற்) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரைஇரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( ஸதீழிஐழி ) முத்திரை என்று இதற்குப் பெயர்.எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

tirsdag den 1. januar 2008