ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸன்ம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.
அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண பார்வையில் எனக்குச் சிறுமியாக இருப்பதுதான் சரி என தோன்றினாள். மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இருந்தது.
பிச்சைக்காரியாக இருந்தாலும் வலிந்து பரிதாபத்தைக் கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டு அழுக்காக இருக்க வேண்டும் என்று விரும்பாதவளாக இருந்தாள். சாப்பிடுவதற்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு சில ஓட்டலுக்கு இப்படி ஒரு ராசி. க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிட வேண்டும்.
சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும் தருணத்தில் இப்படியான ஓர் ஆர்வமூட்டும் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பது மற்றெல்லாவற்றையும்விட சுலபமான திசைதிருப்பலாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியேறுபவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அதிகம் கெஞ்சாத தொனியில் அவள் "சார் சார்'' என்றாள். பெரும்பாலும் அதற்குப் பலன் இருந்தது. ஏதோ டைம் கேட்பதற்காகக் கூப்பிடுகிறாள் என்று திரும்பி பின் சுதாரித்து அவர்கள் பிச்சை போடுவது தெரிகிறது. தட்டில் விழும் காசுகளை அவள் உடனடியாக பர்ஸில் எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
ஏதோ மீன்காரியும் காய் கறி விற்பவளும் காசை வாங்கி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வது போல ஒருவித வியாபார மிடுக்கு அதில் தெரிந்தது. பிச்சை எடுப்பதை அவள் ஒரு தொழில் போல நினைத்திருக்கக் கூடும். இடுப்பில் கையூன்றி அவள் ஒய்யாரமாக நிற்பது அவளுக்கு இது கேவலமான தொழில் என்பது போன்ற உலக நியாயங்கள் தெரியாது என்பதை உணர்த்தியது. இன்று புதிதாய் பிச்சைக்காரி ஆனவளோ? என்னைப் போலவே எல்லோரும் அவளிடம் இயல்பு தவறிய ஈர்ப்பு இருப்பதைக் கவனித்தனர். ஆனால் என்னைப் போல இப்படி நேரம் எடுத்து கவனிக்கவில்லை.
அவளுடைய மலர்ந்த விழிகளாலோ, கூரிய நாசியோலோ நான் மேலும் ஈர்க்கப்பட்டதோடு, இரந்து பிழைக்கக் கூடிய தன்மை இவளிடம் இல்லையே எப்படி இந்த பூமியில் அவளால் தொடர்ந்து பிச்சை எடுத்துப் பிழைக்க முடியும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. மாற்று யோசனையாக இவளுக்கு என்ன வேலையைக் கொடுத்தால் இவளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
இந்த நேரத்தில் "சார் 3வது டேபிள் காலி'' என்ற குரல் கேட்டது. உட்கார வைத்து விடுகிறார்களே தவிர சாப்பாடு வடிக்கவில்லை, அப்பளம் ரெடியாகவில்லை என்ற தாமதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
சாப்பிட உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் சர்வருக்கும் சாப்பிட வந்தவருக்கும் சண்டை வராத டேபிள்கள் எத்தனை எண்ணிக் கொண்டிருந்தேன்.
ரேஷன் கடை ஊழல், பெனிபிட் பண்டு மோசடி, போன ஆண்டு கட்டிய பாலம் இடிந்து 100 பேர் பலி, கன்னா பின்னாவென்று கணக்குக் காட்டும் எலக்ட்ரிசிட்டி மீட்டரை சரிபார்த்துத் தருவதற்கு லஞ்சம், டிரைவிங் லைசென்ள்ஸக் காட்டிய பிறகும் பைக் சாவியை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏடாகூடமாக விசாரிக்கும் போலீஸ்... இப்படி கோபப் படவேண்டிய எத்தனையோ இடங்களில் மக்கள் காட்டும் பொறுமைகள் எல்லாம் ஹோட்டல் டேபிள்களில் வந்த பின்புதான் ஆவேசமடைகின்றனபோலும்.
இந்த ஒரு பிறவியை மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கவனிப்பதற்கு ஒதுக்கிவிட்டு அடுத்தப் பிறவியில் இருந்து வாழலாமா என திடீரென நினைத்தேன். ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி என ஒன்று இல்லாமல் போனாலும் பெரிய பாதகம் இல்லை போலத்தான் தோன்றியது. அந்தப் பெண் போன பிறவியில் இளவரசியாக இருந்திருப்பாளோ? வெறும் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து என் கை மேலேயே ரசத்தை ஊற்றிவிட்டுப் போனான் சர்வர். சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டோமா என்று திடீரென சுரணை வந்து, அதன் மீதே கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றச் சொல்லி சாப்பிட்டேன்.
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டாவது வேலை இது. காலை ஆறுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் பத்துமணிக்காவது ஆபிஸன்க்குப் போகமுடியும் என்ற இடைவெளி. அப்புறம் அம்மா தந்த சாப்பாடாக இருந்தாலும் மத்தியானத்தில் சாப்பிடவா முடியும்?
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பக்கத்துக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைப்பதில் இருக்கும் ஈடுபாடும் இன்பமும் எனக்குச் சாப்பாட்டில் இருந்ததில்லை.
சாப்பிட்ட பிறகு ஒரு தம் போடலாம் என்பதற்காகச் சாப்பிடுகிறேன். எழுந்தால் ஒரு தம் அடிக்கலாம் என்பதற்காகவே காலையில் நான் கண் விழிக்கிறேன். இனி சிகரெட் கடையெல்லாம் மூடியிருப்பார்கள் என்பதற்காகவே இரவு படுக்கப் போகிறேன். சொல்லப் போனால் சிகரெட் புகைப்பதற்காகச் சம்பாதிப்பதாகவே ஆகிவிட்டது.
சற்று தொலைவில் அந்தச் சிறுமி. வெய்யிலுக்காக கண்களை இடுக்கிக் கொண்டு நிற்பதிலும் உலகப் பரபரப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிற நிதானமும் அலட்சியமும் என்னை மீண்டும் ஈர்த்தது. நாம் வெளியே வந்த போது எங்கே போயிருந்தாள்? இவளைப் படிக்க வைத்தால் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவோ, விளையாட்டு வீராங்கனையாகவோ வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாள். அவள் மீது நம்பிக்கையோ, இரக்கமோ தோன்றியது.
சாப்பிட்ட களைப்பு நீங்குவதற்காக அருகே இருந்த பெட்டிகடையில் அவரவர் ரசனைக்கேற்ப பீடியோ, சிகரெட்டோ, வெற்றிலையோ போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கிளிப்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சஞ்சிகைகளை ஆனவரைக்கும் குனிந்து நெளிந்து படித்தார்கள். படிப்பதில் இவ்வளவு ஆர்வமா எனப் பெருமையாக இருக்கும். பத்திரிகையைக் கையில் கொடுத்தால் அப்படி படிப்பார்களா என்று தெரியவில்லை. காசு கொடுத்து வாங்கி இவர்கள் கையில் திணித்துப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு வசதியில்லை. இவர்களில் யாருக்குமே அவள் குறித்து அக்கரை ஏற்படாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
சூரியன் ஓட்டலுக்கு நேர் மேலே இருந்தது. எந்தப் பக்கத்திலும் நிழலே இல்லை. ஓட்டலின் சுவரில் நிழலாலேயே பெயிண்ட் அடித்த மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது. இப்படியான தருணத்தில் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதையில் வருவது போல சுட்டுவிட முடியுமா நம்மால் என்று இருந்தது. யோசனை வேறு பக்கம் திரும்பியது. துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டுமா? துப்பாக்கி இல்லாவிட்டால் போகிறது. உருட்டுக்கட்டையை எடுத்து ஒருத்தன் நடுமண்டையில் அடிக்க முடியுமா?...
அந்தச் சிறுமியை மீண்டும் பார்த்தேன். அவள் நடைபாதை மேடையில் அமர்ந்து காலை சாலையில் தொங்கவிட்டபடி வெயிலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த சிறிய மணிபர்ஸத் திறந்தாள். அதன் உட்புறத் திறப்பில் சிறிய கண்ணாடி. அதில் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உலர்ந்து போன சிக்கடைந்த சிகையை விரல்களால் பின்பக்கம் தள்ளிவிட்டாள். பின்னர் முன் நெற்றியில் சிறிய முடிக் கற்றையை விரல்களால் சுருட்டிவிட்டுக் கொண்டாள். அவளுடைய முகம் அவளுக்கு வியப்புக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். தன் மூக்குத்தியைத் திருகி அதில் பொறித்த உருவத்துக்கு ஏற்ப இப்படித்தான் இருக்க வேண்டும் போல நிலைப்படுத்தினாள். மெல்ல தன் நுனி நாக்கால் அக்கண்ணாடியைத் தொட்டாள்.
கண்ணாடியிலிருந்த நாக்கும் அவளுடைய நாக்கைத் தொட்டது. அவள் பூரிப்பான புன்னகையோடு அதை உள்வாங்கிக் கொண்டு அதே வேகத்தில் இதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று கவனித்தாள். என்னையும் என் கண்கள் அவள் மீது நீண்ட நேரமாய் ஊடுருவி இருந்ததையும் அவள் கணித்தாள். நான் கவனித்துவிட்டேன் என்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். வித்தியாசமாக எதுவும் நடந்துவிடவில்லை என காட்டிக் கொண்டு இயல்பாக பர்ள்ஸ மூடினாள்.
நான் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குப் புரிந்துபோனது. ஆனால் நான் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ளாமல் கவனக் குவிப்பு எதுவும் இன்றி சும்மா வெறித்துக் கொண்டிருந்ததாகத்தான் இருக்கும் என அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது உண்மைதானா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதில் அவளுக்குத் தவிப்பு இருந்தது. மீண்டும் நான் அவளைக் கவனிக்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். அதை நான் என்னவென்று விவரிப்பது. மிக நாசூக்கான அவதானிப்பு அது.
நான் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அவளுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அவள் அங்கிருந்து எழுந்து ஓட்டலின் மறு முனைக்குப் போய் அனிச்சையாக கையேந்தி நின்றாள். அவள் செய்யக் கூடாத வேலை என்று உறுதியாகிவிட்டது எனக்கு. நாமே அழைத்துச் சென்று வளர்க்கலாமா என்று ஆவேசம் ஏற்பட்டு, பிறகு ஏதாவது அனாதை ஆசரமத்தில் வைத்து படிக்க வைக்கலாம் என்று மாறியது.
அதிகபட்சம் 13 வயசு இருக்கலாம். சரியான ஆகாரம் சாப்பிடாதவளாக உணர்ந்து 14 வயதாகவும் இருக்கலாம் என்று கணித்தேன். போதிய கவனிப்பு இருந்தால் அவளுடைய நிறத்துக்கு இன்னும் அழகாகவே இருப்பாள். யாருடைய இரக்கம் காரணமாகவோ வழங்கப்பட்டிருந்த அந்த பாவாடை- சட்டையும்கூட அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது. அவள் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் என்று தெரிந்தது. கன்றுக்குட்டிக் காதல் என்பார்களே அதற்குச் சற்று முந்தைய உணர்வு என்று சொல்லலாம் அதை.
அந்த உணர்வு எனக்கானதா? அவளுக்கானதா? என்பது அவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமில்லை. இருந்தாலும் அதை இருவருக்குமானதாகத்தான் நான் நினைத்தேன். ஒருவரை ஒருவர் கவனிக்கிறோம் என்ற பால் ஈர்ப்பு. வெட்கம் தடவிய உணர்வு. ஒரு பையனாக இருந்தால் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்காது என நினைத்தேன்.
வெயில் உக்கரமாக இருந்தது. கூட்டமும் கடை வாசல் பக்கமாகவே குழுமிவிட்டது. கடையில் தொங்கவிடப்பட்டிருந்த படுதாவும் புகைப்பிடிப்பு வஸ்துகளும் மக்களை இந்தப் பக்கமாக நகர்த்திவிட்டது. அந்தச் சிறுமி இருந்த இடத்தில் யாருமே இல்லை. யாருமில்லாத இடத்தில் அவளால் பிச்சையும் எடுக்க முடியாதே. ஆனால் அவள் இந்தப் பக்கம் வராமல் இருப்பதற்கு நான் இருப்பதுதான் காரணமா என்பதை அறிந்த போது வருத்தமாக இருந்தது.
நான் அவள் கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்து கொள்வதைக் கவனித்து விட்டதற்காக இப்படி நடந்து கொள்கிறாளா? ஒருவேளை நாம் இருக்கும்வரை இந்தப் பக்கம் வரவே மாட்டாளோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான் இன்னொரு சிகரெட்டை வாங்கிக் கொளுத்திக் கொண்டேன்.
மனசின் பனிமூட்டம் மெல்ல விலக ஆரம்பித்தது. இவள் அம்பிகா போல அல்லவா இருக்கிறாள் என்று பதறிப் போய் சுதாரித்தேன். அவள் முகத்தை நெருங்கிச் சென்று பார்க்கவோ, அல்லது பட்டை வெயிலில் கருகிக் கொண்டிருக்கும் அவளுக்கு ஓடிப் போய் குடை பிடிக்க வேண்டுமென்றோ தோன்றியது. கிராமத்தில் கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது ஊரில் இருந்த இன்னொரு பாட்டியின் வீட்டுக்கு என்னைப் போலவே விடுமுறைக்காக வந்திருந்தவள்தான் அம்பிகா.இருவருமே ஐந்தாம் வகுப்பு என்பதைத்தவிர எங்களுக்குள் வேறெந்த சிறப்பு ஈர்ப்புகளும் இல்லை. ஆனால் அவள் விடுமுறை முடிவதற்குள்ளாகவே திடீரென்று அவளுடைய ஊருக்குப் புறப்பட்டுவிட்டபோது ஏதோ இருந்தது என்று தெரிந்தது. அவள் போனதும் எனக்கும் அங்கு கொண்டாட எதுவுமில்லாததுபோல் ஆனது. அதன் பிறகு வேறு எந்த கோடைவிடுமுறைக்கும் வராமலே போய்விட்ட அம்பிகாதான் இப்போது ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி போல் என் முன் நிற்பதாக மகிழ்ந்தேன்.
அவள் இப்படித்தான் பாவாடை சட்டை போட்டிருந்தாள். இடுப்பில் கை வைத்து நிற்பதும் இப்படித்தான்.
நான் அவள் முகத்தைப் பார்த்து அம்பிகா ஜாடைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு அம்பிகாவின் முகம் அத்தனைத் தெளிவாக நினைவில் இல்லை. பாவாடை, சட்டை, ரிப்பன், நடை} பாவனை என்று மொத்தமான அபிப்ராயமாக அவள் இருந்தாள். நான் சிகரெட் புகையை ஊதுவதற்காகத்தான் அந்தப் பக்கம் திரும்பியதாகச் செயல்பட்டேன். உண்மையில் அவளும் என்னை அடிக்கொருதரம் ரகசியமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். நான் இருக்கும் பகுதிநோக்கி வருவதில் தயக்கமும் இருந்தது. அவள் அடுத்த முறை பார்த்தபோது அவளுடைய இத்தனை செய்கையையும் உளவாங்கிக் கொண்டதன் அடையாளமாக ஒரு புன்னகையைச் சிந்தினேன்.
அவளுக்கு அது தன்னை நோக்கித்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திடுக்கிட்டு வேறுயாருக்கானதோ என்று விழித்தாள். என்ன சந்தேகம் இந்தப் புன்னகை உனக்குத்தான் என்பதாக மீண்டும் சிரித்தேன். திகைத்தே போனாள். அது எனக்கு மேலும் சிரிப்பை ஏற்படுத்தியது. தன் மீதான இப்படியொரு கவனத்தை அவள் பெரிதும் விரும்பினாள்போல தெரிந்தது. இதற்கு முன்னால் இப்படியொரு நிகழ்வு அவளுக்கு எற்பட்டிருக்குமா தெரியவில்லை. அது அவளுக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்திருக்க வேண்டும். சில்லறைகள் இல்லாதத் தட்டில் விரலால் கிறுக்கி, எந்த பாதிப்பும் ஏற்படாதவளாகக் காட்டிக் கொண்டாள்.
அவள் இப்போது மேலும் அழகாகத் தெரிய ஆரம்பித்தாள். முகம் பழக ஆரம்பிப்பதும் மனசு அதற்கு ஒரு பிரத்யேக வடிவம் கொடுக்க ஆரம்பிக்கிறது. ரஜினிகாந்த் கண்டக்டராகவே இருந்திருந்தால் அவருடைய போட்டோவை சலூனில் ஒட்டி வைப்பார்களா? கருணாநிதி ஒரு ஆரம்ப பள்ளிக்கூட வாத்தியாராக இருந்திருந்தால் அவரைப் பார்க்க இப்படியொரு கூட்டம் கூடுமா? அவர்கள் செய்த சாதனை, அதனால் எற்பட்ட புகழ் இதையெல்லாம் மீறி முகம் பழகிப் போய் அந்த முகத்தை நேரில் பார்க்கிற ஆர்வம் என ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
பிச்சை எடுப்பதற்கான ஒரு தகுதியும் அவளிடம் இல்லை போல தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு பெரிய நகைக்கடை அதிபரின் மகளாக ஏசி அறையில் இருப்பதுதான் அவளுக்குப் பொருத்தமான வாழ்க்கையாக இருக்கும் போலவும் நினைத்தேன்.அவள் மனதால் கோடீஸ்வரி போல இருந்தாள். வரவர எனக்கு இந்த எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.
முனிவரின் நிஷ்டையைக் கலைத்த பாவத்துக்காக இளவரசிக்கு இப்படியொரு சாபம் வழங்கப்பட்டு, மிகவும் கதறி அழுது விமோசனம் வேண்டினாள் அவள்.
முனிவரும் மனமிரங்கி "இந்தப் பிறவியில் நீ மணக்க வேண்டிய இளவரசன், அடுத்த பிறவியில் வசந்தா பவன் வாசலில் சிகரெட் பிடித்தபடி இருந்து உனக்குப் பிச்சை இடுவான். அப்போது இருவரும் இளவரச ரூபம் கொள்வீர்கள்'' என்று கூறியிருந்தால் நன்றாக இருக்குமே என நினைவுகள் குமிழிட்டது.
ஆவேசமாக வந்த ஒரு பெண்மணி, அந்தச் சிறுமியின் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி அதாலேயே அவளுடைய தலையில் ஒரு அடி போட்டுவிட்டு ""இன்னாடீ பண்ணீங்கீறே இம்மா நேரமா இங்க?'' என்றாள்.
இப்படியொரு அவமானத்தை என் எதிரில் எதிர்கொண்டது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் அவளுக்கு. ஆனால் செம்மையான உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்திப் பழக்கமில்லாதவளாக அவள் இருந்தாள்.
"கூட்டம் அங்க நிக்குது.. இங்க இன்னா பண்றே?'' என்றபடி முடியைப் பிடித்து இழுத்து கடை இருந்த பக்கம் நோக்கித் தள்ளினாள்.
அவள் ஆவி புகுந்தவள் போல நானிருந்த பக்கம் நோக்கித் தட்டேந்தி எந்திரத்தனமாக வந்தாள். இருந்தாலும் ஒரு இளவரசியின் நடைதான் அது. என் எதிரே வந்து தயக்கமில்லாம் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். நானும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன். காசு போடுவதா, கையைப் பிடித்து அனாதை இல்லத்துக்கு அழைத்துச் செல்வதா? சட்டென்று அங்கிருந்து அகன்றுவிடுவதா?... அந்தக் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தேன்.
பாக்கெட்டில் இருந்த காசும் அதற்குக் கீழே இருந்த இதயமும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தன.
நன்றி: சண்டே இந்தியன் வார இதழ்
søndag den 27. april 2008
Abonner på:
Opslag (Atom)