lørdag den 2. august 2008

முத்திரை கவிதைகள்


மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!

- குழந்தை , பி.பழனிச்சாமி

*

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்

*
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- உயிரின் ஒலி , மகுடேசுவரன்
*

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

- வலி , ஜி.ஆர்.விஜய்

*

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

- குற்ற மனசு , ஜெ.முருகன்

*

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

- புண்ணியம் , க.பாலவெங்கடேசன்

நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு