விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.
நன்றி -ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த
"எளிய ஆகம பூஜாமுறை"
tirsdag den 24. februar 2009
Abonner på:
Opslag (Atom)