lørdag den 15. november 2008

மதம் என்ற ஒன்று தேவைதானா ?

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்
பார்க்கும்போது 'மதம் என்ற ஒன்று தேவைதானா ?' என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று
நாசகார ஆயுதங்கள் வருகின்றன!

வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு
வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன!
உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து
வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்
வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,
விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.

கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்!
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப்
பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டதுதான் அது!

இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்
பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.

வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்
இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, 'நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!' என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்
மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்
பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,
தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.
இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி

இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்
குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த
பாவத்துக்கு பரிகாரம் என்றார்.

இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று
மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.

ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.
எந்த மதமானாலும் அவை 'அயலானுக்கும் அன்பு காட்டு' என்பதை வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!' இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

Ingen kommentarer: