onsdag den 21. januar 2009

அறைக்குள் மௌனம் - ஹெச்.ஜி.ரசூல்

ஒரு மீன் குஞ்சைப் போல் வளர்ந்தேன்
அப்போதும் பேசமுடியவில்லை
கண்ணாடித் தொட்டி விடுதலை தர
ஆற்றில் விடப் பட்டேன்
அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல.
நீரோடும் திசையெல்லாம் ஓடிய போது
கொக்கொன்றின் காத்திருப்பு
பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள
புதையுண்டழிந்த ஈர்ப்பின் துகள்களாய்
விதையுள் புகுந்து
கீழா நெல்லிச் செடியாய் வடிவெடுத்த
என்னின் தேடலில்
திரும்பவும் உறைந்தது மௌனம்
ஒரு வெள்ளாடு என்னை மேய்ந்து தின்றது
குழந்தையின் உதடு சப்புக் கொட்ட
சுரந்த பாலின் நிறமானேன்
அந்த வெற்றுடலில் கவிந்த நிழல்
ஒரு சொல்லைத் தேடிப் பயணித்த களைப்பில்
அறைக்குள் நிறைந்திருந்தது.

நன்றி : அம்ருதா - டிசம்பர் 2008

Ingen kommentarer: