tirsdag den 10. marts 2009

ஜென் கதைகள்

மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான்.
"இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.

***********
போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-
"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.
ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்
"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''
அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-
"இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.

***********
ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான்.
இன்னொரு சீடன் சொன்னான் “எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'.

வியாஸன்

நன்றி - வடக்குவாசல்

Ingen kommentarer: