tirsdag den 12. maj 2009

நான் படித்துச் சுவைத்தவை

யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா...மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்!

புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு வேலை-வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்துபோகிறது வாழ்க்கை. சென்னையில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம். நாம் எத்தனை தூரம் பயணம் போகிறோமோ அந்த அளவுக்கு நம் பார்வையும் ஞானமும் விரியும். எந்த அளவுக்குப் புதிய புதிய நாகரிகங்களையும் புதிய புதிய கலாசாரங்களையும் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் மேம்படும். நம் ஞானிகளும் முனிவர்களும் இந்தப் பரந்த பாரததேசத்தைத் தாண்டியும் யாத்திரைகள் மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நானும் பயணித்திருக்கிறேன். அப்படிச் சில அனுபவங்களை இப்போது பேசலாமா.!

சில மாதங்களுக்கு முன்பு வாழ்வியல் பயிலரங்கம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பாடாகியிருந்த ஒரு நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. 'சரி, டிஸ்னி லேண்ட் போய்வரலாமே?‘என்று என் மாணவர்கள் என்னை அழைத்துப்போனார்கள்.

அங்கே ஒரு ரோலர்கோஸ்டரில் நான் பயணம் செய்த அனுபவம் பரவசமாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த ஸீட்டில் பிடிமானமோ, ஸீட் பெல்ட்டோ இல்லை. கொஞ்சம் உஷாராகவே உட்கார வேண்டிய கட்டாயம். ரோலர்கோஸ்டர் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டு, நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கை சர்ர்ரென்று வானத்தில் ஏறியது. சரசரவென்று திருப்பங்களில் வளைந்து ஓடி, தடாலென்று சறுக்கிக் கொண்டு அதலபாதாளத்தில் கீழே சரிந்தது. சிறுகுடல் பெருங்குடலைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வாய்க்கே வந்துவிடும் போலிருந்தது அந்த அனுபவம். இருந்தாலும் ரோலர்கோஸ்டர் பயணத்தை ரசித்தேன். திடுக் திடுக்கென வரும் திருப்பங்களை ஆனந்தமாக அனுபவித்தேன். என் மாணவர்களும் இந்த த்ரில் பயணத்தில் ரொம்பவே லயித்துப்போனார்கள்.

லயிப்புக்கு என்ன காரணம்? பயம்!

பயணம் முடிந்து கீழே இறங்கியதுமே அத்தனை பேர் முகத்திலும் அப்படியரு சிரிப்பு. அவரவர் பயத்தைப் பற்றி அவர் களே ஜோக்கடித்துக்கொண்டார்கள். நிஜம்தானே. எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள், தலைகீழ் மாற்றங்கள் இவை எல்லாமே சந்தோஷம் கொடுக்க வல்லவைதானே. பிறகு ஏன் வாழ்க்கையில் எதிர்பாராதது நடந்தால் ரோலர்கோஸ்டர் போல சிலிர்த்து மகிழாமல் நொறுங்கிப் போகிறோம்?

சாதாரண ஒரு டிரான்ஸ்ஃபர் வந்தால் கூட, ''என் மேலதிகாரி என்னைப் பழி வாங்கிவிட்டார்‘' என்று ஏன் அடுத்தவர்களைத் திட்டுகிறோம். வீட்டில் நமது தப்பை அப்பா சுட்டிக்காட்டினால், ''அக்கா கொரங்கு போட்டுக்கொடுத்துட்டா'' என்று ஏன் புலம்புகிறோம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி ஒரு த்ரில்லான அனுபவமோ... ஜாலியான, சந்தோஷமான அனுபவமோ அது மாதிரிதான் வாழ்க்கை யும்! ரோலர்கோஸ்டர் மாதிரியே வாழ்க்கையில் வரும் உயர்வுதாழ்வுகளையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும்.

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் "இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை" என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும்.

ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

நன்றி: சுவாமி சுகபோதானந்தா

Ingen kommentarer: