fredag den 2. april 2010

மடமும் சிறுவனும் - ஸென் கதை


பழங்காலத்தில் சைனாவில் கிராமப்புறங்களிலும் சிறு நகரத்திலும் வாழந்தவர்கள் மிகவும் வறியவர்களாய் இருந்தனர். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, உறங்கும் இடம் கொடுத்து பாதுகாப்பதே மிகவும் கடினமான காரியமாக இருந்தது. சில இடங்களிலில் இருந்த ஸென் மடத்தில் வசித்த பிக்ஷுக்கள் தாங்களாகவே உணவு தரும் பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து உணவிற்காகப் பயன்படுத்தினர். பருத்திகளை பறித்து நூல் தயாரித்து ஆடையாக அணிந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தாங்களாகவே கடும் முயற்சியுடன் தயாரித்து மற்றவர்களை நம்பி இல்லாமல் தன்னிறைவு பெற்று இருந்தனர். பிக்ஷுக்கள் தத்துவம் தவிர உடற்பயிற்சியிலும், தற்காப்புக் கலைகளிலும் சிறந்து விளங்கினர். நல்லொழுக்கம், நன்னடத்தை, நற்பண்பு கொண்டவர்களாக இந்த பிக்ஷுக்கள் இருந்தனர்.

ஒரு கிராமத்தில் இருந்த ஏழைக் குடும்பத்தில் பல பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தவர், அவர்களுக்கு தகுந்த உணவு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப் பட்டார். அதனால் தன்னுடைய குழந்தைகளில் சிறுவனான ஒருவனைத் தேர்ந்தெடுத்து மடத்தில் சேர்த்து விடுவது என முடிவெடுத்தார். ஆனால் மடத்தில் வெகு சில சிறுவர்களையே உதவியாளனாக சேர்த்துக் கொள்வார்கள். தன்னுடைய பையனுடன் சென்ற தந்தை மடத்தின் தலைமைக் குருவைச் சந்தித்து, "நீங்கள் என்னுடைய பையனை உங்களுடைய உதவிக்காக மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு கைமாறாக என்னுடைய பையன் கடினமான வேலைகளை செய்வான், பிக்ஷுக்கள் அனைவரையும் மதித்து நடப்பான், அதனால் தயவுசெய்து அவனை உங்கள் மடத்தில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பல ஏழைக் குடும்பங்கள் இருந்ததால் அனைவரும் தங்களுடைய குழந்தையை மடத்தில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரையும் ஏற்றுக் கொண்டு மடத்தில் தங்க வைப்பதோ, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோ சிரமமான காரியம் என்பதால், பல சிறுவர்களை ஏற்றுக் கொள்ள மடத்தில் மறுத்து விடுவார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக இந்தச் சிறுவனை சேர்த்துக் கொள்ள தலைமைக் குரு அனுமதி கொடுத்து விட்டார்.

பிக்ஷுக்கள் பையனிடம் ஒரு மேலங்கியைக் கொடுத்தனர். பையன் தன்னுடைய தந்தையையும், கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்தான். சிவந்த மேலங்கியைத் தவிர அவனுக்கென்று வேறு எந்தப் பொருளும் அங்கு இல்லை. ஒரு முதிய துறவி பையனிடம் வந்து, தண்ணீர் கொதிக்க வைக்கும் பெரிய அண்டாவினைக் காட்டி, "அங்கே இருக்கும் அண்டாவினை எடுத்துக் கொள், அதில் தண்ணீரை நிரப்பி அருகில் இருக்கும் பெரிய பாறையின் மேல் வை" என்று அவனுக்கு வேலையை கொடுத்து விட்டு சென்று விட்டார். பையனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, எதற்காக தண்ணீரை நிரப்பி பாறையின் மீது வைக்கச் சொல்லுகிறார். வேலையை செய்ய மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வார்கள். சுற்றி எங்கேயும் தண்ணீரை கொதிக்க வைக்கும் அடுப்பும் இல்லை. இத்தனை குழப்பமான சிந்தனைகளுக்கு இடையேயும் துறவி சொன்னது போல் செய்து முடித்தான்.கொஞ்சம் நேரத்தில் அந்தப் பக்கம் வந்த முதிய துறவி, தன்னுடைய கைகளால் தண்ணீரை வெட்டி வெளியே தெரிப்பது போல் செய்து காட்டி விட்டு, "நான் செய்தது போல் தண்ணீரை வெளியே உனது கைகளால் தெளி" என்று கூறிவிட்டு சென்று விட்டார். விநோதமான செயலாக சிறுவனுக்கு பட்டாலும் துறவி கூறியது போல் செய்து முடித்தான். பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்தது, அண்டா தண்ணீர் இல்லாத வெற்று அண்டாவாகியது, அவனுடைய கைகளோ தண்ணீரைத் தெளித்து தெளித்து விறைத்துப் போய் இருந்தது. கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் முதிய துறவி அவனிடம் வந்து, "அண்டாவினை முன்பு போல் நிரப்பு" என்று சொல்லி விட்டு சென்று விட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரை நிரப்புவதும், அதனை கைகளால் வெட்டி தெரிப்பதுமாக இருந்தான். இது போல் ஒரு மாதம் முடிந்தது.

தன்னுடைய தந்தை மிகவும் தவறான முடிவெடுத்து விட்டார். இங்கு நான் எதையும் கற்கவும் இல்லை. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்கிறேன். துறவிகளுக்கு பின்னால் அவர்களைப் பற்றி குறை சொல்லுவதும் நல்லதில்லை என்று எண்ணி மனம் வருந்தினான்.மூன்று மாதங்கள் சென்றிருக்கும், பையனுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய ஊருக்கு சென்று வரலாம் என்று அனுமதி கொடுக்கப் பட்டது. அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்காவது இந்த அண்டாவினையும், தண்ணீர் தெளிப்பதினையும் விட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் அவனை கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்தனர். "உனக்குப் பிடித்திருந்ததா?, மிகவும் கடினமான வேலை கொடுத்தார்களா?, உன்னுடைய கைகளால் மரப் பலகைகளை உடைத்தாயா?, தியானம் பற்றி எதாவது சொன்னார்களா?". பதில் சொல்லுவதற்கு அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் செய்ததெல்லாம் அண்டாவினை நிரப்புவது, அதனைத் தெளித்து அண்டாவினை வெறுமையாக்குவது. வேறு ஒன்றும் செய்தானில்லை.ஒருவழியாக "இன்னும் நான் எதையும் கற்க வில்லை, இனிமேல் தான் ஆரம்பிப்பார்கள்" என்று கூறினான். ஆனால் அனைவரும், "கண்டிப்பாக எதாவது சொல்லிக் கொடுத்து இருப்பார்கள், அதில் ஒன்றினை எங்களுக்கு செய்து காட்டு" என்றார்கள்.

சிறுவனுக்கோ வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலுடன், "நான் எதையும் கற்கவில்லை" என்று பதில் கூறிவிட்டு பக்கத்திலிருந்த அடுப்பங்கரைக்கு சென்று விட்டான்.கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் பையனின் உறவினர் ஒருவர் அவனிடம் சென்று, "நீ எல்லாரிடம் சொல்ல முடியாது, அதனால் என்னிடம் மட்டும் சொல்லு" என்று அவனை பதில் கூற வற்புறுத்தினார்.

அவ்வளவு தான் மிகவும் கோபம் அடைந்த சிறுவன் சத்தமாக "நான் எதையுமே கற்கவில்லை!" என்று கத்திவிட்டு, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு குதித்து எழுந்தவன், எதிரே இருந்த மரத்தினால் செய்த பலகையில் (பெஞ்சில்) தன்னுடைய கைகளால் வேகமாக கோபத்துடன் ஒங்கி வேகமாக வெட்டினான். அந்த கனத்த மரப்பலகை கனப்பொழுதில் இரண்டாக பிளந்தது.அப்பொழுதுதான் பையனுக்கு தான் என்ன கற்றோம் என்பது புரிந்தது.

Ingen kommentarer: