fredag den 23. november 2007

பொய்கள்


பெண்ணுடன் சிநேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமிகண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒரு முறந் தவிட்டுக்காக வாங்கினேன் என்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய்?

தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை இல்லை யென்றெண்ணினாயா?

அல்லது வயதா னோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்தாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன் பிள்ளை உன்னை விட்டு வேறெங்கு பெறுவான் பொய்கள்?

ஞானக்கூத்தன்
நூல்: மீண்டும் அவர்கள்

mandag den 5. november 2007

வாழ்த்துக்கள்

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம் தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயோர்க்கின் ஒரு கோணம் மணமாகி மறந்துவிட்ட தங்கைக்கு
நினைவோடே பொக்கை வாய்க் குழந்தைகள்.
காணாத போது என் கவிதையை,
முன்பல்லை விமர்சிக்கும் நண்பர்க்குக் கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்குஸ“னரிகள்
அடியே -போன ஜனவரியில் புதுப் படத்து அரையிருளில் காதோரம் ·
நீயிட்ட நீர்த் தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய் மரபைக் காட்டி கொண்ட
ஒரு கனவையும் குலைத்து விட்ட உனக் கென்ன அனுப்ப?
மொட்டை மரம் புத்தர் படம்
கற்றை குழல் ஜானகியின் தனியுருவம்?
இல்லை - அட்டைக் கறுப்பில் நீல மசி தோய்த்து நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப் புரிந்து கொள்.

பாலகுமாரன்
நூல்: விட்டில் பூச்சிகள்

இன்பத்தமிழ்



தமழுக்கும் அமுதென்று பேர் -
அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எஙகள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர் -
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் -
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் -
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் -
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Barathythasan