tirsdag den 25. december 2007

டென்மார்க் கேர்னிங் நகரில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் !


டென்மார்க் கேர்னிங் நகரில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் !
சுமித்திரா சுகேந்திராவின் மாணவி நீரஜா சிறீமுருகன் !

டென்மார்க் கலாக்கேந்திரா நாட்டியாலய அதிபர் திருமதி சுமித்திரா சுகேந்திராவின் மாணவி செல்வி. நீரஜா சிறீமுருகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நேற்று 11.09.2004 சனிக்கிழமை மாலை 16.00 மணி முதல் 21.00 மணிவரை கேர்னிங் நோரகேத கலாச்சார இல்லத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நடனத்தைப் பயின்று, பரதம், சங்கீதம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைந்து இந்த அரங்கப் பிரவேசத்தை வெகுசிறப்பாக அவர் நிறைவு செய்தார். மேற்படி விழாவிற்கு பிரதம விருந்தினராக ஜேர்மனியின் நிருத்திய நாட்டியக்கலாலய அதிபர் நாட்டியக் கலைமணி, பரதசூடாமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் வருகைதந்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக ஈக்காஸ் நோரபாடசாலை ஆசிரியை திருமதி இங்க குறோ அவர்கள் கலந்து கொண்டார்கள். சரியாக 16.00 மணிக்கு டென்மார்க் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயக்குரு சிறீதரசர்மா சலங்கைபூஜையுடன் அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செல்வன் முகுந்தன் நாகேந்திரா தமிழிலும், செந்தூரா மாதவமேனன் டேனிசிலும் வரவேற்புரை நிகழ்த்தி அவையினரை வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு இசைக்கலைமணி, இசைமாமணி திருமதி. குமுதா பிறித்விராஜன் அவர்கள் வழங்க, மிருதங்கம் சங்கீதரத்னம் திரு.ச.பிரணவநாதன், வயலின் நெய்வேலி எஸ். ராதாகிருஸ்ணன், வீணை செல்வி. கீதா சுவாமிநாதன், தம்புரா. செல்வி அர்ச்சனா செல்லத்துரை ஆகியோர் இசைத்தனர்.
ஒப்பனை திருமதி வசந்தா தனபாலன், ராணி மனோகரன் இணைந்து வழங்கினார்கள். நிகழ்வுகளை ஆசிரியர் கி.செல்லத்துரை, செல்விகள் பிரவீணா தனபாலன், ஜனனி பரமேஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

பரதநாட்டிய அரங்கேற்றத்தின் நடன ஒழுங்குகள் ஒரு ஆலயத்தின் கோபுரம் போல கட்டமைவு பெறும் என்று பாலசரஸ்வதி சுட்டிக்காட்டியதை ஒப்பிட்டு இந்த நடன அரங்கேற்றத்தை பிரதமவிருந்தினர் வாழ்த்தினார். அத்தோடு சகல கலைஞர்களின் பணிகளையும் பாராட்டி இந்த அரங்கேற்ற நிகழ்வின் வெற்றிக்கு அவை எப்படியாக உறுதுணை சேர்த்தன என்றும் தமிழ்த் தோரணமாக எடுத்துரைத்தார். அதற்கமைவாகவே அன்றைய நடனங்களில் மூன்று முக்கிய கட்டங்களையும் வளர்ச்சியையும் அவதானிக்க முடிந்தது.

புஸ்பாஞ்சலி, கணேசவந்தனம், அலாரிப்பு முதல் கட்டமாக அமைந்தன. பின்னர் சப்தம், வர்ணம், கீர்த்தனை, பதம் ஆகியவை இன்னொரு படியாகவும், கந்துகநிருத்தம், தாயகநினைவு, தில்லானா, சாயிபஜன் ஆகியவை மூன்றாவது படியாகவும் அமைந்திருந்தன.
வழமையாக படிப்படியாக நடனத்தை வளர்த்துச் செல்லும் நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா இம்முறை முதலாவது நடனத்திலேயே வேகமான பாடல்களுடன் தனது பணியை ஆரம்பித்தார்.
ஆறுகட்டை சுருதியில் இசைக்கலைமணி, இசைமாமணி திருமதி. குமுதா பிறித்விராஜன் பல பாடல்கள் வீசிச் சென்றபோது பக்கவாத்தியக் கலைஞர்கள் பெரிதும் கவனமெடுத்து வாசித்து, கடினமான இசைப்பணியை கண்ணிமைக்காது, கருத்தோடு நிகழ்த்திச் சிறப்புச் சேர்த்தார்கள்.

அதேவேளை செல்வி. நீரஜா சிறீமுருகன் இந்த மூன்று முக்கிய படிமுறைகளையும் யாதொரு கங்கடமும் இல்லாமல் வெகு அநாயசமாக செய்து அவையின் பாராட்டைப் பெற்றார். வர்ணத்தில் அவர் காட்டிய பாவங்கள், கதையோட்டத்திற்கு ஒப்புவித்த உணர்ச்சி பேதங்கள், தூது இலக்கியத்திற்கு காட்டிய படபடக்கும் தவிப்பு, வீரமணிஐயரின் தாயக நினைவை விளக்கும் விரகவேதனைப் பாடலுக்குக் காட்டிய ஏக்கம் கலந்த சோகம், அங்க அசைவு, முத்திரை, நளினம், முகபாவ மாற்றம், களைப்பற்ற மகிழ்வு யாவுமே அவருக்கிருந்த ஈடுபாட்டை விளக்குவதாயிருந்தன.
அரங்கப்பிரவேசத்தை நிறைவு செய்தபோது அவை எழுந்துநின்று வானளாவிய வாழ்த்து கரகோசத்தை தொடர்ந்து வழங்கியது. அழகு தமிழில் அவர் வழங்கிய நன்றியுரை, நிறைவாக பெற்றோரிடம் பெற்ற ஆசிகள் யாவுமே சிறப்பாக அமைந்திருந்தன. நேரத்திற்கு தொடங்கி, நேரப்படியே யாவற்றையும் நடாத்தி குறித்த நேரத்தில் நிறைவு செய்தமை உட்பட அனைத்துமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.




அலைகள் செய்திப்பிரிவு 12.09.04

Ingen kommentarer: