lørdag den 1. december 2007

நிஜத்தைத் தேடி சிறுகதை சுஜாதா


கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.பழக்கப்பட்ட மௌனம்.கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர் சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள்.மர கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டது.ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் கையில் தட்டுடன் காலில் செருப்பின்றி தோட்டத்தில் நடந்து வந்தான்."யாரு?" என்றான்.சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க.வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க .எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

"பாத்தியா விமலா! இந்தக் குழந்தைங்க படற அவஸ்தையை" என்பதுடன் கதையை நிறுத்திவிட்டு சித்ராவும் எட்டிப் பார்த்தாள்.
அவன் முகத்தில் மூன்று நாள் தாடி. கண்களில் தேவைக்குப் போதுமான சோகம் "என்னவாம்" என்றாள்.
அவன் "ஊருக்குப் புதுசு வேலை தேடி வந்தேங்கம்மா" என்று துவங்கி மறுபடி அத்தனையும் சொன்னான்.
மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக் கொடுக்கவேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அபபடிச் செய்யவில்லை. செய்யமாட்டான்.எதையும் விசாரிப்பான். சித்ராவுக்குத் தெரியும்.
"வீடு எங்கே" என்றான்
"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க" "சரி அட்ரஸ் சொல்லு"
"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக "இரு"
"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்!காலைல இறந்துட்டா" "சரிதாம்பா,அட்ரஸ் என்ன? சொல்லேன்!"
அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்"என்றான் "மூணாவது க்ராஸ்னா?எச்.எம்.ட்டி லே அவுட்டா?சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?"
"சொல்லத் தெரியலிங்களே,சினிமா தியேட்டர் பக்கததில""அவனோட என்ன வாக்குவாதம்?""இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?""என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"
"எனக்குத் தெரியும். நீ சொல்லு"அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா"
"சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?""என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன்,என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும்.பிணம் கிடக்கு அங்கே!""அட்ரஸ் சரியா சொல்லு தரேன் ""அதான் சொன்னேனே""சரியா சொல்லு""அய்யோ" என்றான் ."வேண்டாம் ஸார்.என்ன நீங்க"சித்ரா எதிர்பார்த்தாள்."என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ" என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம் எதிர்பார்த்தாள். அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான் . தட்டைக் கை மாற்றிக்கொண்டு மௌனமாக அழுதான்."வரேன் ஸார்" என்று திரும்பி நடந்தான். போகும்போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர பார்ககவில்லை "போய்ட்டான்" என்றான். "கூப்பிடுங்க அவனை!" என்றாள் சித்ரா."எதுக்கு? எல்லாம் பாசாங்கு. தெரியுமோல்லியோ?""ப்ளீஸ். அவனைக் கூப்பிடுங்கோ. கூப்ட்டு எதாவது கொடுத்து அனுப்பிடுங்கோ" கிருஷ்ணமூர்த்தி சிரித்து வெளியே பார்த்தான்.சற்று தூரத்தில் அவன் தெரிந்தான்.இன்னும் அழுது கொண்டே சட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே சென்று மறைந்தான். "அவன் சொல்றது உண்மையா இருந்தா பளிச்சுன்னு அட்ரஸ் சொல்லியிருப்பானோ இல்லியோ? ஏன் தயங்கணும் ? அட்ரஸ் சரியா சொல்லிருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனோ?"என்றான் "அவன்தான் ஊருக்குப் புதுசுங்கறானே.சரியா அட்ரஸ் சொல்லத் தெரியலையோ என்னவோ" "சேச்சே உனக்குத் தெரி‘யாது சித்ரா, இது பெரிய்ய ரேக்கெட்.அவனைப் பார்த்தான மனைவி செத்துப் போனவன் மாதிரியா இருந்தது? திருதிருவென்று முழிச்சானே""எனக்கென்னவோ அப்படிப் படலை.எதுக்கு அழுதான்?""அதுவும் அவனுடைய நாடகத்தில ஒரு பகுதி""ஏதாவது கொடுத்திருக்கலாம், பா..வம்""மறுபடியும் மறுபடியும் அசட்டுத் தனமா பேசறியே. வெளி உலகத்தில எத்தனை பொய் இருககு தெரியுமா? எவ்வளவு ஏமாத்து வேலைகள்? வீட்டுக்குள்ளயே இருக்கறவ நீ. ரொமபப் பித்தலாட்டம் நடக்குது தெரியுமா?""எனக்கு அவன் மூஞ்சியைப் பார்த்தா பொய் சொல்றவன் மாதிரி தெரியலை" "உனக்கு அந்த அறிவு போறாது""சரி போதாதுன்னு வெச்சுக்கலாம் அவன் பொய் சொல்றான்னே வெச்சுக்கலாம்.ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்தா என்ன தேஞ்சா போய்டுவோம்?எவ்வளவு செலவழிக்கிறோம் கன்னா பின்னான்னு"

"அது வேற விஷயம். வீடு தேடி வந்து ஆளுங்களை முட்டாள் அடிக்கிறவனுக்கு நாம ஹெல்ப் பண்ணணுமா என்பதுதான் ப்ரச்சனை. இப்ப அவன் நேர வந்து'ஸார் நான் ஒரு ஏழை, அடுத்த வேளை சோத்துககு காசில்லை'ன்னு யோக்கியமா வந்து கேட்டிருந்தா ரெண்டு ரூபா என்ன அஞசு ருபா கூட கொடுப்பேன் அதை விட்டுட்டு அனியாயத்து•கக பெண்டாட்டி செத்துப்போனதா சரடு விட்டுட்டு சாவுன்ன உடனே கேள்வி கேக்காம தந்துருவாங்கன்னு ஒரு கதையை ஜோடிச்சு... என்ன ஒரு பித்தலாட்டடம் பாத்தியா இதை எப்படி நாம என்கரேஜ் பண்ண முடியும்? சொல்லு."
சித்ராவுக்கு எத்தனையோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவன் முகத்தில் பொய்யில்லை என்று சொல்ல வேண்டும் நியாயமாகவே அவனுக்கு இருந்த சோகத்தில் புதுசாக சரணடைந்த வீட்டின் விலாசத்தை சொல்வதில் கழப்பம் இருந்திருக்கலாம் என்று, நீங்க செஞ்சது எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை என்று , சொன்னால் வாக்குவாதம் வரும் சண்டை வரும் எக்கேடு கெட்டுப்போ என்ற சாப்பிடாமல் வெளியே போய்விடுவார் குக்கர் பெருமூச்சுவிட்டது. சித்ரா உள்ளே சென்றாள்.
கிருஷ்ணமூர்ததி செய்தித் தாளில் ஆழ்ந்தான். நியுஸ்ப்ரிணட் வார்த்தைகளில் அவன் கவனம் நிலைக்கவில்லை.. தான் செய்தது சரிதான் என்பது அழுத்தமாக ஏன் இவளுக்குப் புரியவில்லை? சுளித்துக் கொண்டு உள்ளே சென்றதிலேயே ஏமாற்றத்தைக் காட்டினாளே அவளுக்கு என்ன தெரியும். இங்கிருந்து பேசினான்-
"இப்படித்தான் ஒரு தடவை திருப்பதிக்கு போறேன்னு ஒரு அம்மா மஞ்சள் புடவையோட வந்து அஞ்சு ருபா வாங்கிண்டு போனாளே! என்ன ஆச்சு? தியேட்டர்ல பார்க்கலை நாம?""ஆமாம்""அப்புறம் அனாதைப் பள்ளிக்கூடம் நடத்தறோம்னு நோட்டீசு ரžது புஸ்தகம் எல்லாம் அடிச்சுண்டு ஒருத்தன் வந்தானே என்ன ஆச்சு?""என்ன ஆச்சு" என்றாள் உள்ளிருந்து"அந்த மாதிரி தெருப் பேரே இந்த ஊர்ல இல்லைன்னு கண்டு பிடிச்சுக் காட்டினேனே இல்லையா?" "ஆமாம் ஞாபகம் இருக்கு""அப்படி யெல்லாம் சுலபமா ஏமாறக்கூடாது பத்து ரூபாய்க்காக பெத்த தாயையே செத்துப் போனதா சொல்லிடுவாங்க. இந்த உலகத்தில எத்தனை பொய் இருக்கு தெரியுமா சித்ரா?" சித்ராவிடமிருந்து பதில் வரவில்லை"சித்ரா?"பதில் இல்லைகிருஷ்ணமூர்த்தி பேப்பரை மடித்து வைத்துவிட்டு சமையலறைப் பக்கம் சென்றான்.சித்ரா அடுப்படியில் அழுது கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டான்."இப்ப எதுக்காக அழறே?"அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள்."எதுக்கா இப்ப அழுகைன்னு கேக்கறேன்" என்று அதட்டினான் "ஒன்றுமில்லை""பொய் சொல்லாதே நான் அவனை விரட்டினதுக்காகவா?""இல்லை..இல்லை" விசம்பல்களுக்கிடையே சொன்னாள்."எனக்கென்னவோ அவன் பொய் சொல்லலைன்னு தோணித்து அவன் திடீர்னு அப்படி விக்கி விக்கி அழுததை நினைச்சுண்டேன் யாரோ ஒரு ஜ“வன் ஏதோ ஒரு துக்கம் அதை எனக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போய்ட்டாப்போல ஆய்டுத்து""எல்லாம் பொய்னு எத்தனை தடவை சொல்றது""எப்படித் தெரியும் உங்களுக்கு" என்று தன்னியல்பாகக் குரலை உயர்த்திக் கேட்டாள். அவன் அவளை உக்கிரமாகப் பார்த்தான்."எப்படித் தெரியுமா ? சொல்றேன். அனுபவம்டி .வெளில எனக்கு ஏற்பட்ட அனுபவம். சித்ரா நீ எல்லாத்தையும் இமோஷனலா பார்க்கறே அதான் உங்கிட்ட தப்பு. நான் ப்ராக்டிக்கலா பார்ககறேன்"

"சரி, நீங்க சொல்றதுதான் சத்தியம். நான் அழலை" என்றாள். "ஆனா" "என்ன சொல்லு. மனசில நினைச்சிண்டிருக்கிறதை சொல்லிடு" "நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா இருந்து தொலைச்சுடுத்துன்னா.. அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும் சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும் பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை.." "மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றியே ரெண்டு ரூபாய் பெரிசில்லை எனக்கு சித்ரா ப்ரின்சிப்பிள் அதான் முக்கியம்!"

"சரி" என்றாள் சுருக்கமாக. சற்று நேரம் மனைவியையே பார்த்தான்."ஆல்ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை.ஒண்ணு செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில்தான் இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி ஆகும் ? வா காரை எடுத்துண்டுபோய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்" "வேண்டாம். நீங்க சொன்னது எனக்கு கன்வின்ஸ் ஆய்டுத்து.நான் ஏதோ பைத்தியக் காரத் தனமா அழ ஆரம்பிச்சுட்டேன்.""இல்லை நீ கன்வின்ஸ் ஆகலை. நான் சொன்னது சரின்னு உனக்கு இன்னும் புரிபடலை" "நான் வரலை! எனக்கு நிறைய வேலை இருக்கு""நீ வரலைன்னாக் கூட நான் போய்ப் பார்க்கத்தான் போறேன்""எதுக்காக விதண்டாவாதம் மறங்க""இல்லை இந்த கேஸ’ல யார் சரின்னு பார்த்தாகணும் நீயா நானா""நீங்க சொன்னதுதான் சரி ஒப்புத்துண்டுட்டேனே""நீ இன்னும் மனசார ஒப்புததுக்கலை. உனக்கு ப்ரூஃப் வேணும்தானே நான்போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்""இது என்ன பிடிவாதம் நீங்க அங்க போய் அவன் சொன்னது நிஜம்னே தெரிஞ்சா என்ன செய்யப்போறிங்க""தோல்வியை ஒப்புத்துண்ணடு பத்து ருபா அல்லது பதினஞ்சு ரூபா கொடுத்துட்டடு வந்துருவேன் ஆனா அப்படி நடக்காது லைஃப்ல நிறைய பார்த்துட்டேன் சித்ரா""அவ்வளவு ஷ்யுரா இருந்தா எதுக்குப் போகணும்""உனக்காகத்தான் சித்ரா நீ அருவியா அழுத பாரு? அது தப்புன்னு ஸ்தாபிக்கிறதுக்கு" "எனக்கு இப்ப சிரிப்பு வரது""அப்புறம் சிரிக்கப் போறது யாருன்னு சொல்றேன்"

கிருஷ்ணமூர்த்தி ஷெட்டை திறந்து பெரிய கேட்டைத் திறந்து காரைக் கிளப்பி žறிப் புறப்பட்டான் தியேட்டர் ஒரு மைலுக்குள் இருக்கும். நிச்சயம் போய்ப் பார்த்து விடவேண்டும் மூணாவது கிராஸ் என்று தானே சொன்னான் ? என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாள் கருணை இல்லாதவன் என்றா? இவளுக்கு என்ன தெரியும் கேள்வி கேட்காமல் காசை சமர்ப்பிக்க நான் என்ன முட்டாளா? அழு மூஞ்சி இப்படித்தான் ஒரு தடவை...
தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும் தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்ப்டடு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.பச்சை மூங்கில்கள் காத்திருந்தன.ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான். கிருஷ்ணமூர்த்தி சற்று நேரம்தான் தயங்கினான். காரை ரிவர்ஸ் செய்தான் .žறிப் புறப்பட்டான், திரும்பவும தன்வீட்டை நோக்கி.

"என்ன ஆச்சு?" என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக "நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ் முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை""அப்படியா? அப்பா! எத்தனை பொய்!" என்றாள் சித்ரா.
(முற்றும்)

Ingen kommentarer: