lørdag den 5. januar 2008

"ரீமிக்ஸ்' வன்முறை!

அண்மைக்காலமாக பழைய தமிழ்த் திரைப்பாடல்கள் வேறுவிதமான இசை வடிவங்களில் மிகப் பரவலான முறையில் தமிழ் மக்களின் காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கின்றன.

பழைய பாடல்களின் இனிமையைக் குலைத்து நிதானத்தை வேகப்படுத்தி இடையிடையே நகைப்புக்குரிய முறையில் ராக் இசையைத் திணிக்கும் வன்முறைக்கு நமது தமிழ்த் திரையுலகினர் "ரீமிக்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மேல்நாட்டு ராக் இசைப்பாடலின் நடுவிலே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி என்று நிதானமான தமிழில் இரண்டு வரிகளை யாராவது சேர்த்து ரீமிக்ஸ் முயற்சி சேர்க்கிறார்களா!

தனது வரலாற்றைத் தானே சிதைத்துக் கொள்கிற தமிழ்த் திரையுலகின் அதிகப்பிரசங்கித்தனத்தைக் கண்டித்து திரையுலகின் தரப்பில் இருந்தே முதல் கண்டனக்குரல் எழுந்திருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் எதுவும் நிகழவில்லை; அது ஏன் என்றும் தெரியவில்லை.

மனிதகுல வரலாற்றில் நாம் பார்க்கிற, படிக்கிற, கேட்கிற யாவுமே ஆவணங்களாகும். அவ்வகையில் நமது பழைய தமிழ்த் திரைப் பாடல்களும் நமக்கான ஆவணங்களாகவே திகழ்கின்றன. எனவே, அவற்றைக் குழப்பி அதில் மீன் பிடித்துப் பிழைக்கிற அவல நிலைக்கு இன்றைய நமது இளைய தலைமுறை இசைப் படைப்பாளிகள் போய்விடக்கூடாது. சந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டித்தேரு என்கிற ஒரு வரியில் தேனி வீரபாண்டிக் கோயிலின் தேர்த் திருவிழா குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றின் போக்கில் நாளை தேர் மாறினாலும், இந்தத் திரையிசை ஆவணம் மாறாது. இந்தப் பாடலை, மார்க்கட்ல நின்னாலும் நீ விரபாண்டி காரு' என்று ரீமிக்ஸ் செய்து பாடினால், அது நமது ஆவணத்துக்கெதிரான துரோகமேயன்றி வேறென்ன?

""பழைய பாடல்களின் வரிகளுக்கு வேறுவிதமான மியூசிக்கை கம்போசிங் செய்வது ஒன்றும் குற்றமல்ல. இப்படிப்பட்ட "மாடிஃபிகேஷனை' தற்போது மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலைப் போட வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. அது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் விருப்பமாக இருக்கிறது. மற்றபடி இந்தப் போக்கு தவறானது எனும் கருத்திலும் உண்மையில்லாமலில்லை'' என்று ரீமிக்ஸ் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.
""தமது காலத்தில் திரைப்பாடல்களுக்கு இசையமைத்து அதைப் படைப்பாக்கி, மக்களின் மாபெரும் வரவேற்புடன் அவற்றை நிலைநிறுத்தியிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களுக்குச் செய்யும் துரோகமல்லவா இது? எனும் பேராசிரியர் நிர்மலா இராஜேந்திரனின் கேள்விக்கான விடையை இன்னும் எவரும் சொல்லவில்லை.

உலகின் மூத்த இசை தமிழ் இசைதான். இதை நுõற்றுக்கணக்கான இசை ஆய்வாளர்கள் உறுதி செய்திருப்பதோடு, திரும்பிய திசையெல்லாம் தமிழ் இசை ஒலிக்க வேண்டும் என்றும் விரும்பி, அதற்கு ஆதரவாக இயக்கத்தையே தொடங்கி நடத்தினார்கள். நமது தொன்மையான அந்த இசையை அடிப்படையாக வைத்தே தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு அக்கால இசையமைப்பாளர்கள் இசையமைக்கத் தொடங்கினார்கள். அத்தகைய மரபுப் பெருமைமிக்க நமது திரையிசைப் பாடல்களை, மாடிஃபிகேஷன் செய்வது கடைந்தெடுத்த அதிகப்பிரசங்கித் தனமல்லவா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நீர்த்தேக்கமான கல்லனை தொடர்ந்து பயன்படவேண்டும் என்பதற்காக அதன் உறுதிக்கு மேலும் உறுதி சேர்க்கும் விதமாக கட்டுமானத்தை பலப்படுத்துவது சீரிய பராமரிப்பு பழைய பாடல்களுக்கு அத்தகைய பராமரிப்பு அவசியமில்லை. அவை ஒவ்வொன்றும் தேயாத நிலவு.

19ஆம் நுõற்றாண்டில் ஸ்காட் என்ற ஐரோப்பிய பாதிரியார் தமிழின் யாப்பிலக்கணத்தில் வல்லவராகி, திருக்குறளை தம் விருப்பத்தக்குத் திருத்தி எழுதி, பால், இயல், அதிகாரங்களையம் மாற்றி (அதாவது மாடிஃபிகேஷன் செய்து கொண்டு) மதுரைக்குச் சென்று நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த பாண்டித்துரை தேவர் அவரிடமிருந்து அந்த (திருத்தப்பட்ட) திருக்குறள்படிகள் மொத்தத்தையும் விலைகொடுத்து வாங்கி, தீ வைத்துக் கொளுத்தி, திருக்குறளைக் காப்பாற்றினார். அதுபோல ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஒரு முடிவு கட்டினால் இப்பிரச்னைக்குத் தீர்வு கிட்டும்.

நன்றி கல்கி

Ingen kommentarer: