மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், நம்பிக்கைத் தரும் இளைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். விளம்பரப் படங்கள், குறும்படங்கள், திரைப்படம் என பரந்துபட்டது இவர் புழங்கும் வெளி. சிங்கள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முதல் தமிழர் என்ற வகையில் இவரது அனுபவம் தனித்துவமானது. உரையாடலில் வெளிப்படும் மாணவர்களுக்கேயுரிய ஆர்வமும், மேதைகளுக்கேயுரிய ஞானமும் அவருடனான சந்திப்பை இனிமையான அனுபவமாக்கியது.
* தொழிற்கல்வி படித்த நீங்கள் திரைத்துறைக்கு வந்தது எப்படி?
மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில்தான் நான் பிளாஸ்டிக் என்ஜினியரிங் படித்தேன். அப்போதே சினிமாவில் ஆர்வம் இருந்தது. பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அதை வீட்ல சொல்ல முடியாத சூழல்; பயம். படிப்பு முடிந்ததும் மெடிக்கல் ரெப் வேலை. நல்ல சம்பளம். என்னால தனியா சம்பாதிக்க முடியும்னு வீட்ல நம்பிக்கை வந்த பிறகு, என்னோட சினிமா ஆசையை சொல்லி, அவங்க சம்மதத்தோடு சென்னை வந்தேன்.
* இரண்டாயிரத்துக்குப் பிறகு சென்னை வந்த நீங்க, குறுகிய காலத்தில் ஒளிப்பதிவாளர்ங்கிற நிலையை எட்டியிருக்கிங்க. இறுக்கமான தமிழ் சினிமாத் துறையில் இது அபூர்வம் இல்லையா?
சினிமாதான் எல்லோருக்கும் பொதுவானதே தவிர சினிமா இன்டஸ்ட்ரி அப்பிடி இல்லை. போராட்டங்களை எதிர்கொ ள்ள முடிந்தால் மட்டுமே நீங்க சினிமா இன்டஸ்ட்ரியில் நுழையவும், கவுரவமான ஒரு இடத்தை பிடிக்கவும் முடியும். அதை தக்கவச்சுக்கிற போராட்டங்கள் வேற. பெரிய அளவில் போராட்ட நெருக்கடிக்கு ஆளாகாமல் என்னை காத்தது, ஐயப்பன். இவர் இயக்குனர் பாலாவோட தம்பி.மதுரையில் இருக்கும்போதே பழக்கம். அவர்தான் என்னை கேமராமேன் ஏ.எஸ்.செந்தில்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். அவருடன் நிறைய விளம்பரப் படங்களுக்கு வேலை செய்தேன்.அந்த அனுபவம்தான் இன்னைக்கும் எனக்கு ஆதாரமா இருக்கு. அப்புறம் கேமராமேன் சாந்த மூர்த்தி சார். கேமராமேனா என்னோட குருன்னா அது மணிகண்டன் சார். அவருடன் 'Main Hoona' ஹிந்திப் படத்துல வேலை பார்த்தேன். அப்புறம் தமிழல் 'அந்நியன்'. இதுதவிர நிறைய விளம்பரப்படங்கள். அவர்கிட்ட குறுகிய காலம் பணி புரிந்திருந்தாலும், இன்றைய நவீன தொழில்நுட்பம் பத்தி கத்துக் கிட்டது அவர் கிட்டதான். சினிமால தொழில்நுட்பம் தவிர்த்து நான் கத்துகிட்டது, சினிமாவுக்கு வர்றவங்க சுதந்திரமா இருக்கணும். பொருளாதாரரீதியா அவங்களை சார்ந்திருக்காத குடும்பம் ரொம்ப முக்கியம். அப்புறம் நண்பர்கள். பொருளாதாரரீதியா என்னை எதிர்பார்க்காத குடும்பமும், உதவி செய்ய தயாராயிருக்கிற நண்பர்களும் அமைந்ததுதான் என்னோட இந்த குறுகியகால வளர்ச்சிக்கு அடிப்படைனு நினைக்கிறேன்.
* சினிமா கேமராமேன்கள் அனேகமாக எல்லோருமே விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துறாங்க. நீங்களும் விளம்பரப் படங்கள் செய்திருக்கிங்க, இல்லையா?
ஜான்சன் பேபி ஆயில், எல்ஜி, ஃபா டால்கம் பவுடர், ஹமாம் சோப், விட்கோ லக்கேஜ்னு எழுபதுக்கும் மேல விளம்பரப் படங்களுக்கு கேமராமேனா வொர்க் பண்ணிருக்கேன். சினிமால இரண்டரை மணி நேரத்துல ஒரு கேள்வியை எழுப்பணும் அல்லது ஒரு மெசேஜ் சொல்லணும். விளம்பரப் படத்துக்கு முப்பதே செகண்ட்ஸ். நீங்க புராடக்டை எக்ஸ்போஸ் பண்ணணும் அத்தோடு அதை வாங்கவும் வைக்கணும். அந்தவகையில் விளம்பரப் படங்களுக்கு துல்லியமான கிரியேடிவ்சென்ஸ் தேவைப்படுது.
* உலகத்தரம் வாய்ந்த சினிமா, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என்பதான சொல்லாடல்கள் தமிழில் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கு. இது குறித்து என்ன நினைக்கிறீங்க?
வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விஷயம். என்னளவில் உலக சினிமா குறித்த அறிவு முக்கியமானதா நினைக்கிறேன். உலக சினிமாக்களை, பெரிய masters-ஸோட படங்களை பார்க்கும்போதுதான் நாம எந்த இடத்துல தேங்கி நிற்கிறோம்ங்கிறதை தெரிஞ்சுக்க முடியுது. குரோசாவா அப்புறம் தார்க்கோவ்ஸ்கியோட படங்கள் பார்க்கும்போது, இவங்கதான்.... இவங்க மட்டும்தான் விஷுவல் மாஸ்டர்ஸ்னு சொல்லத் தோணுது. அதே மாதிரி கோடாட், ஹிட்ச்ஹாக், பிரிட்ஸ் லாங்க் முப்பதுகளிலும் ஐம்பதுகளிலும் என்ன செய்தாங்களோ அதைத்தான் நாம இப்போ பெரிய விஷயமா செஞ்சுகிட்டிருக்கோம். இங்கே புதுசுனு எதுவும் இல்லை. அவங்க சோதனை முயற்சி செய்ததைதான் நாம திரும்ப பண்றோம். அந்தப் படங்களில் இருந்த நேர்மை, செறிவு இப்போ நம்மிடம் இருக்கானு கேட்டால், இல்லை.
* இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சினிமாவை விட, இயக்குனர்களைவிட ஒளிப்பதிவாளர்களே அதிகம் காணக் கிடைக்கிறார்கள். இது எதனால்?
ஒளிப்பதிவுக்கு மொழி தடையில்லை. இதையே பிரதான காரணமா நான் நினைக்கிறேன். அப்புறம் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள்னு பல்வேறு வடிவங்களில் ஒளிப்பதிவாளர்கள் வேலை செய்கிறார்கள். குறிப்பா டெக்னாலஜியுடன் சேர்ந்து பயணிக்கிறாங்க. இது ரொம்ப முக்கியம். ஒரு லென்ஸை பயன்படுத்தி ஒரு திரைக்கதையை மேம்படுத்த முடியாது. ஒரு கேமராவை வச்சு ஒரு நடிகனோட நடிப்பை மெருகேத்த முடியாது. ஆனா, அட்வான்ஸான ஒரு லென்ஸை, கேமராவை, பிலிமை வச்சு காட்சியை பிரமாதப்படுத்த முடியும். சூப்பர் 35, சூப்பர் 16 தொழில்நுட்பம் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்.
* சிங்கள சினிமாவில் பணிபுரிந்த முதல் கேமராமேன் நீங்கதான் இல்லையா?
அப்படி சொல்ல முடியாது. பலர் வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, முதல் முதலா ஒரு சிங்கள பியூச்சர் பிலிமுக்கு முழுமையா ஒளிப்பதிவு செய்தது நான்தான்னு சொல்லலாம்.
* இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
லண்டன் புரொடியூசர் ஒருத்தருக்காக ஆல்பம் பண்ணுனேன். அதைப் பார்த்து குறும்படம் பண்ண இலங்கையிலிருந்து வாய்ப்பு வந்தது. 'ட்ரீம் கில்லர்' ங்கிறது குறும்படத்தோட பெயர். அப்புறம் 'விழி'ங்கிற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இதில் 'விழி' முழுமையா இலங்கையில் ஷுட் செய்யப்பட்டது. அந்த அனுபவம் வித்தியாசமானது. இலங்கை அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்டது, படப்பிடிப்பில் ஏற்பட்டதுனு இருவேறு அனுபவங்கள் அவை.
* இரண்டு அனுபவங்களையும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?
போர் பதற்றம் காரணமா இலங்கையின் முக்கிய சாலையான A9- ஐ மூடிட்டாங்க. இதனால் கொழும்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நீங்க போக முடியும். அப்புறம் செக்யூரிட்டி. ஒருகிலோமீட்டர் போவதற்குள் நாலுமுறை காரிலிருந்து இறக்கி முழுமையா செக் பண்றாங்க. கேட்கிற போதெல்லாம் பாஸ்போர்ட்டை காண்பிக்கணும். இந்த செக்யூரிட்டியும் இரண்டு காரணங்களுக்காக. ஒண்ணு, அவங்க பாதுகாப்புக்கு. இன்னொண்ணு நம்ம பாதுகாப்புக்கு.
* தமிழர்கள் என்று வரும்போது தொந்தரவுகள் அதிகமிருக்குமே?
இலங்கை மாதிரியான ஒரு நாட்டில் அது எதிர்பார்க்கக் கூடியதுதான். 'விழி' படத்தோட கதைப்படி, ராணுவ வீரனின் படம் தேவை. 'விழி' டைரக்டர் செல்வன் அதுக்காக ஸ்டுடியோவுக்கு போயிருக்கார். அங்க இருந்த சிங்கள நபர் போட்டோவை பார்த்துட்டு, ஏதோ தமிழ் போராளி வந்திருப்பதா நினைச்சு, போலீஸ்கிட்ட சொல்ல, செல்வனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த விவரமே ஒரு வாரம் கழிச்சுதான் தெரிய வருது. கொழும்பிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மூலமா, உண்மையை விளக்கி, செல்வனை வெளியே கொண்டு வர்றதுக்குள்ள 33 நாட்கள் ஓடிப் போயிடுச்சி. அந்தப் படத்தை எடுக்க இதைவிட குறைவான நாட்கள்தான் எங்களுக்கு தேவைப்பட்டது. ஷுட்டிங் அனுபவமும் வித்தியாசமானது. டிராக் அண்டு டிராலி, லைட்ஸ் உள்பட எல்லா எக்யூப்மெண்ட்ஸுமே நவீனமானவை. எக்யூப்மெண்ட்ஸில் நம்மைவிட அட்வான்ஸா இருக்காங்க. ஆனா, அதை எப்படி கையாள்றதுங்கிறது அவங்களுக்கு தெரியலை. இன்னைக்கு ஒரு ஷாட் எடுத்திட்டு நாற்பதுநாள் கழிச்சு அதன் கண்டினியூட்டி எடுக்கிறது தமிழில் சாதாரணம். அவங்களுக்கு அது இன்னும் கைகூடி வரலை. ஒரு நடிகர் இல்லைனா, ஒரு எக்யூப்மெண்ட் இல்லாமப்போனா அந்தச் சூழலை சமாளிச்சு எப்படி ஷாட் எடுப்பது என்பதில் அவங்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கு.
* சிங்களர்கள் மிகுந்த இலங்கை சினிமாவில் தமிழர்களின் நிலை எப்படியிருக்கு?
நான் ஒளிப்பதிவு செய்த முதல் சிங்களப் படம் 'லீடர்.' ரஞ்சன் ராமநாயக்க நடித்தது. இங்க ரஜினி மாதிரி அங்கே ரஞ்சன் ராமநாயக்க. இலங்கை சூப்பர் ஸ்டார். அவர் கடைசியாக இயக்கி நடிச்ச இரண்டு படமும் சூப்பர் ஹிட்! பொன்னம்பலம் ஆரூரான், நிலாப்ரியன் தெளபிக் என்கிற இரண்டு இலங்கை தமிழர்கள்தான் தயாரிப்பு. தமிழ்நாட்டிலிருந்து வர்ற தமிழர்கள் நம்மைவிட திறமைசாலிகள்ங்கிற புரிதல் சிங்களர்களுக்கு இருக்கு. அதனால கவுரவமா நடத்துறாங்க.
* சிங்கள திரைத்துறையில் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு எப்படியிருக்கு?
ஆன் ஸ்கிரீனை விட ஆஃப் ஸ்கிரீன் வேலைகளில் அதிக தமிழர்களை காண முடியுது. தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக, டெக்னிஷியன்களாக நிறைய பேர் இருக்காங்க. சக்தி டி.வி.ங்கிற தமிழ் சானல் ஒளிபரப்பாகுது. இலங்கை அரசின் ரூபவாகினியில் 'சேனல் ஐ' ங்கிற முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிற சானல் ஒண்ணும் இருக்கு. அரசியல் தளத்திலும், சமூக அளவிலும் இருக்கிற பதற்றமும், விரோதமும் சிங்கள திரைத்துறையில் பலவீனமான அளவிலே காணப்படுவது ஆச்சரியமான நல்ல விஷயம். இதை வச்சு பிற விஷயங்களை எடைபோடக் கூடாதுனே நினைக்கிறேன்.
* தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லையே?
இலங்கையில் தயாராகிற சிங்களப் படங்கள் ஒப்பீட்டளவில் நமது தமிழ்ப் படங்களை விட தரத்தில் ரொம்ப பலவீனமானவை. கமர்ஷியல் படம் பண்ணுவதில் அவங்க பதினைஞ்சு வருஷம் பின்தங்கியிருப்பதாகவே சொல்லலாம். தமிழ்ப் படங்கள் எடுத்தாலும் நிலைமை பெரிதாக மாற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தயாராகிற படங்கள் இலங்கையில் வெளியாகிற சூழலில், இலங்கையில் தயாரிக்கிற தமிழ்ப் படம் அதோடு ஈடுகொடுக்க முடியுமாங்கிற நியாயமான சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாராகாததற்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.
* தரத்தைப் பற்றி பேசும்போது, சிங்கள மொழியில் மாற்று சினிமா ஆரோக்கியமா இருக்கு இல்லையா?
நிச்சயமாக! நாம இதுவரை பேசுனது மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றி. மாற்று சினிமாவை பொறுத்தவரை பிரசன்ன விதனாகே போன்ற இயக்குனர்கள் உலகத் தரம் வாய்ந்த படங்களை தொடர்ச்சியா தந்துகிட்டிருக்காங்க. இவங்க படங்களில் இனப் பிரச்சனையும், அது எளிய மனிதர்களின் வாழ்வை துண்டாடும் அவலமும் நேர்மையா பதிவு செய்யப்படுது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் நீங்க இதை பார்க்க முடியாது.
* நேர்மை என்று வரும்போது இயக்குனர்கள் அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுமே?
பிரசன்ன விதனாகே இயக்கிய முக்கியமான திரைப்படம், 'டெத் ஆன் ஏ ஃபுல் மூன் டே.' ஒரு வயதானவர். அவரது ஒரே மகன் ராணுவத்தில் பணிபுரிகிறான். ஒருநாள் வயதானவருக்கு, அவரது மகன் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இதனை அவர் நம்ப மறுக்கிறார். மகனின் சடலம் இருக்கும் சவப்பெட்டியை ராணுவம் அனுப்புகிறது. மகனின் உடலை கடைசியாகப் பார்க்க விரும்புகிறார் முதியவர். ராணுவம் மறுக்கிறது. சவப் பெட்டி திறக்கப்படாமலே புதைக்கப்படுகிறது. மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என நம்பும் அந்த வயதான தந்தை சவக்குழியை தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார். உள்ளே சடலத்துக்குப்பதில் கற்கள் இருக்கின்றன. இந்தப் படத்தை இலங்கை அரசு தடை செய்தது. உலகப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகள் வாங்கிய பிறகு, வேறு வழியில்லாமல் படத்தை இலங்கையில் வெளியிட அரசு அனுமதித்தது. நேர்மையாக படம் எடுப்பவர்களின் நிலைமை உலகெங்கும் இப்படித்தான் இருக்கு. சிங்களப்படம் பண்ணப்போனதில் கிடைத்த நல்ல விஷயங்களில் ஒன்று பிரசன்ன விதனாகேயை சந்தித்தது. இலங்கையில் அவரை சந்திக்க முடியாமல் பிறகு சென்னைக்கு அவர் வந்தபோது சந்திச்சேன். மறக்க முடியாத அனுபவம் அது.
* ஒப்பீட்டளவில் சிங்கள மெயின் ஸ்ட்ரீம் படங்களைவிட தமிழ்ப் படங்கள் எல்லா வகையிலும் சிறப்பா இருக்கு. ஆனா, மாற்று சினிமா என்று வரும்போது பிரசன்ன விதனாகே மாதிரி இங்கே சுட்டிக் காட்ட ஒருவர்கூட இல்லையே. இதனை எப்படி புரிந்து கொள்வது?
இலங்கையில் நடப்பது போன்ற போரையோ, அழிவையோ இதுவரை நாம எதிர் கொண்டதில்லை. நெருக்கடியும் உத்தரவாதமில்லாத வாழ்க்கையின் அலைக்கழிப்பும்தான் இலங்கையின் மாற்று சினிமாவுக்கான ஊற்றுக்கண் என்றால், இன்னொன்று நேர்மை. நாம, எப்படி பார்வையாளர்களை ஏமாற்றலாம், கைதட்ட வைக்கலாம்னு யோசிக்கிறோமே தவிர, ஒரு பிரச்சனையை ஆழமா, நேர்மையா அணுகியதே இல்லை. அதிகார அச்சுறுத்தல் குறைவான நமது சினிமாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் மாற்று சினிமா இயக்குனர்கள் குறைந்தபட்ச நேர்மையும் பெரிய விஷயம்தான்! இலங்கையிலும் சரி, ஈரானிலும் சரி, ஆப்பிரிக்க நாடுகளிலும் சரி, அடக்குமுறைகளை தாண்டிதான் நல்ல சினிமா வந்துகிட்டிருக்கு.
* மொத்தமாக பார்க்கையில் சிங்கள மொழி படங்களில் பணிபுரிந்தது திருப்தியளிக்கிறதா?
நான் ஒளிப்பதிவு செய்த 'ட்ரீம் கில்லர்' நியூயார்க் மற்றும் டொரண்டோ குறும்பட போட்டிகளில் பெஸ்ட் சினிமோட்டோகிராஃபிக்கான விருதை பெற்றிருக்கு. அதேமாதிரி 'விழி' கனடா சர்வதேச குறும்பட போட்டியில் சிறந்த சினிமோட்டோகிராஃபிக்கான விருதை எனக்கு பெற்றுத் தந்தது. பிரான்ஸ் குறும்பட விழாவுக்கு 'விழி' சினிமோட்டோகிராஃபி பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருக்கு. தவிர, நமக்கு பழக்கமில்லாத மொழி, இடம், மனிதர்கள்னு சிங்களப்பட அனுபவம் தந்த செழுமையான பகுதிகள் நிறைய. அங்கே எங்கு கேமராவை வைத்தாலும் ஒரு நல்ல காட்சி, காம்போஸிஷன் கிடைக்கும். அந்தளவு இயற்கை எழில்மிகுந்த நாடு.
இனப்படுகொலைகளை மட்டும் நீக்கிவிட்டால், அற்புதமான நாடு அது!
நன்றி - சினி சவுத்
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar