onsdag den 30. december 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

torsdag den 26. november 2009

சுயமுன்னேற்றம்

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.


நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.

யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது.

ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல்.
எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது.

ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது.

வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது.
போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது.

குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள்.
எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள்.

போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று.
பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது.
சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது.


- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

mandag den 5. oktober 2009

எண்ணங்கள் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தாம் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தாம் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தாம் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!"

tirsdag den 15. september 2009

மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி

அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது. அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது.

நன்றி: ஒரு புத்தகம் பேசுது

tirsdag den 28. juli 2009

அவளுக்கும் தமிழென்று பேர் - கண்ணதாசன்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும் குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர்
வயலுக்குநீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

fredag den 24. juli 2009

சனிமூலை - ராகவன் தம்பி

நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.

பொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை. ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும் முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.

இப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.

கிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள். இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.

ஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில் இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும் அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.

மிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர். ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது. சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா.

ரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என்னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள். 'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல் அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.

"அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''
"அநாதையா போகப்போகுது''
"வாரிசு இல்லாத ஆத்மாவா''
இப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது.

அவனிடம் சொன்னேன்-
உனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. "எவ்வளவு வேண்டும் என்று சொல்.''
"ஆயிரம் ரூபாய் கொடு''
"ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும். என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.

சிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்- "விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''

அடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். "நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''

நீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்?' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.

பண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.

மந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன்.
"அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.
"ஹே கங்கா மாதா''
"ஹே கங்கா மாதா''
யாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். "விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''
நான் திருப்பிச் சொன்னேன்.
"நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''
நான் பிரேக் போட்டேன் - "நஹி''
'பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வேன்'
"பில்குல் நஹி''
"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''
"சொல்ல மாட்டேன்''
பரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.
"இல்லை. மாட்டேன்''
அடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.
கண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.
"தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''
"நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''
"அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''

ஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.

குடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்
"மாதர்சோத்''
ரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.

காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் கேட்காதது ஞாபகம் வந்தது.

"முஹமது அனீஸ்'' என்றான்.
வீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.
நீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.
இரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.
"அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''
அக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா?
'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.

நன்றி வடக்குவாசல்

tirsdag den 12. maj 2009

நான் படித்துச் சுவைத்தவை

யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா...மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்!

புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு வேலை-வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்துபோகிறது வாழ்க்கை. சென்னையில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம். நாம் எத்தனை தூரம் பயணம் போகிறோமோ அந்த அளவுக்கு நம் பார்வையும் ஞானமும் விரியும். எந்த அளவுக்குப் புதிய புதிய நாகரிகங்களையும் புதிய புதிய கலாசாரங்களையும் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் மேம்படும். நம் ஞானிகளும் முனிவர்களும் இந்தப் பரந்த பாரததேசத்தைத் தாண்டியும் யாத்திரைகள் மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நானும் பயணித்திருக்கிறேன். அப்படிச் சில அனுபவங்களை இப்போது பேசலாமா.!

சில மாதங்களுக்கு முன்பு வாழ்வியல் பயிலரங்கம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பாடாகியிருந்த ஒரு நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. 'சரி, டிஸ்னி லேண்ட் போய்வரலாமே?‘என்று என் மாணவர்கள் என்னை அழைத்துப்போனார்கள்.

அங்கே ஒரு ரோலர்கோஸ்டரில் நான் பயணம் செய்த அனுபவம் பரவசமாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த ஸீட்டில் பிடிமானமோ, ஸீட் பெல்ட்டோ இல்லை. கொஞ்சம் உஷாராகவே உட்கார வேண்டிய கட்டாயம். ரோலர்கோஸ்டர் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டு, நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கை சர்ர்ரென்று வானத்தில் ஏறியது. சரசரவென்று திருப்பங்களில் வளைந்து ஓடி, தடாலென்று சறுக்கிக் கொண்டு அதலபாதாளத்தில் கீழே சரிந்தது. சிறுகுடல் பெருங்குடலைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வாய்க்கே வந்துவிடும் போலிருந்தது அந்த அனுபவம். இருந்தாலும் ரோலர்கோஸ்டர் பயணத்தை ரசித்தேன். திடுக் திடுக்கென வரும் திருப்பங்களை ஆனந்தமாக அனுபவித்தேன். என் மாணவர்களும் இந்த த்ரில் பயணத்தில் ரொம்பவே லயித்துப்போனார்கள்.

லயிப்புக்கு என்ன காரணம்? பயம்!

பயணம் முடிந்து கீழே இறங்கியதுமே அத்தனை பேர் முகத்திலும் அப்படியரு சிரிப்பு. அவரவர் பயத்தைப் பற்றி அவர் களே ஜோக்கடித்துக்கொண்டார்கள். நிஜம்தானே. எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள், தலைகீழ் மாற்றங்கள் இவை எல்லாமே சந்தோஷம் கொடுக்க வல்லவைதானே. பிறகு ஏன் வாழ்க்கையில் எதிர்பாராதது நடந்தால் ரோலர்கோஸ்டர் போல சிலிர்த்து மகிழாமல் நொறுங்கிப் போகிறோம்?

சாதாரண ஒரு டிரான்ஸ்ஃபர் வந்தால் கூட, ''என் மேலதிகாரி என்னைப் பழி வாங்கிவிட்டார்‘' என்று ஏன் அடுத்தவர்களைத் திட்டுகிறோம். வீட்டில் நமது தப்பை அப்பா சுட்டிக்காட்டினால், ''அக்கா கொரங்கு போட்டுக்கொடுத்துட்டா'' என்று ஏன் புலம்புகிறோம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி ஒரு த்ரில்லான அனுபவமோ... ஜாலியான, சந்தோஷமான அனுபவமோ அது மாதிரிதான் வாழ்க்கை யும்! ரோலர்கோஸ்டர் மாதிரியே வாழ்க்கையில் வரும் உயர்வுதாழ்வுகளையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும்.

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் "இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை" என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும்.

ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

நன்றி: சுவாமி சுகபோதானந்தா

tirsdag den 10. marts 2009

  குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு

தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ,

சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் வெளியான புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது, வாசகர்கள் எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாரியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.

“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடருணும் உங்கள் ஆதரவுதான்.

- அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு

ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.

செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.

குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்பு

ஊத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலாபமே துணை

வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.

குமுதத்தின் இட ஒதுக்கீடு

விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் - 5, அரசியல் - 15, சினிமா - 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு - 2, மருத்துவம் - 5, வாசகர் கடிதம் - 2, உலகச் செய்தி - 2, ஜோக் - 3, சிறுகதைகள் - 9, ஒரு பக்க கதைகள் - 4, புதிர் போட்டி - 2, தொடர் கதைகள் - 15, உணவு - 2, சுற்றுலா - 4, பேஷன் - 4, வேலை, கல்வி - 3, கவிதை - 2, வியாபாரம் சுய முன்னேற்றம் - 5, நூல் அறிமுகம் - 1, பக்தி ஆன்மீகம் - 5, அரசு கேள்வி பதில் - 2, இதரவை - 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.

இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு

படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,

செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை - பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.

இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் - ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு - லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?

புகைப்படங்கள்

குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் - கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.

ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.

மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

விளம்பரங்கள்

‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! - மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.

குமுதவியல்

குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.

குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் - சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.

எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் - இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.

இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து - பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.

காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.

முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி - ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.

பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ - பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.

பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.

இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.

தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.

குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !

நன்றி - புதிய கலாச்சாரம், மார்ச் - 2000

பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.

ஜென் கதைகள்

மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான்.
"இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.

***********
போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-
"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.
ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்
"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''
அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-
"இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.

***********
ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான்.
இன்னொரு சீடன் சொன்னான் “எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'.

வியாஸன்

நன்றி - வடக்குவாசல்

tirsdag den 24. februar 2009

சில ஆன்மீகக் குறிப்புகள்

விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)

பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.

வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.

சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.

பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

நன்றி -ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த
"எளிய ஆகம பூஜாமுறை"

onsdag den 21. januar 2009

அறைக்குள் மௌனம் - ஹெச்.ஜி.ரசூல்

ஒரு மீன் குஞ்சைப் போல் வளர்ந்தேன்
அப்போதும் பேசமுடியவில்லை
கண்ணாடித் தொட்டி விடுதலை தர
ஆற்றில் விடப் பட்டேன்
அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல.
நீரோடும் திசையெல்லாம் ஓடிய போது
கொக்கொன்றின் காத்திருப்பு
பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள
புதையுண்டழிந்த ஈர்ப்பின் துகள்களாய்
விதையுள் புகுந்து
கீழா நெல்லிச் செடியாய் வடிவெடுத்த
என்னின் தேடலில்
திரும்பவும் உறைந்தது மௌனம்
ஒரு வெள்ளாடு என்னை மேய்ந்து தின்றது
குழந்தையின் உதடு சப்புக் கொட்ட
சுரந்த பாலின் நிறமானேன்
அந்த வெற்றுடலில் கவிந்த நிழல்
ஒரு சொல்லைத் தேடிப் பயணித்த களைப்பில்
அறைக்குள் நிறைந்திருந்தது.

நன்றி : அம்ருதா - டிசம்பர் 2008